புறநானூறு பாடல் 25 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

இப்பாண்டியனது இயற்பெயர் நெடுஞ்செழியன் ஆகும். இவன் சிறுவதிலேயே பாண்டிய நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் முடிவேந்தர்கள் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மற்றும் வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரை தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று இவன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்.

இப்பாண்டிய வேந்தனை ஆசிரியர் கல்லாடனார் இப்பாட்டில், இவன் தன்னொடு பகைத்த வேந்தர் இருவரைப் போரிட்டு அழித்து அவர்க்குத் துணை வந்த பிறரையும் வென்று மேம்பட்ட பெருமையை, அப்பகைவர் இறந்ததனால் அவருடைய மகளிர் கூந்தல் களைந்து கைம்மை மேற்கொள்ளும் செயலைக் கூறிச் சிறப்பிக்கின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

மீன்றிகழ் விசும்பிற் பாயிரு ளகல
ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ
துரவுச்சினந் திருகிய வுருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்
குடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை 5

அணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணி
பிணியுறு முரசங் கொண்ட காலை
நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச்
சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய
முலைபொலி யாக முருப்ப நூறி 10

மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒண்ணுதன் மகளிர் கைம்மை கூர
அவிரறல் கடுக்கு மம்மென்
குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே.

பதவுரை:

மீன் திகழ் விசும்பின் – விண்மீன்கள் விளங்கும் வானத்தின்

பாய் யிஇருள் அகல – பரந்த இருள் நீங்க

ஈண்டு செலல் மரபின் – விரைந்து செல்லும் வழக்கமுடைய

தன் இயல் வழாஅது – தனது இயல்பில் தவறாது

உரவுச் சினம் திருகிய உருகெழு ஞாயிறு – மிகுந்த வெப்பமுடன் உருவாகி உதிக்கின்ற கதிரவன்

நிலவுத் திகழ் மதியமொடு – பளிச்சென்ற ஒளியுடன் திகளும் சந்திரனோடு

நிலம் சேர்ந்தா அங்கு – வந்து நிலத்தில் சேர்ந்தாற் போல அங்கே விளங்கி

உடலருந் துப்பின் ஒன்று மொழி வேந்தரை – பொருதுதற்கு அரிய வலிமையுடைய வஞ்சினம் கூறிய இரு வேந்தரை

அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணி – வருத்துதற்கரிய போர்க்களத்தில் தோல்வியுறச் செய்து உடலாலும் மனதாலும் வாடச் செய்து

பிணியுறு முரசம் கொண்ட காலை –வாரால் பிணிக்கப்பட்ட அவருடைய முரசத்தை எடுத்துக் கொண்ட பொழுது

நிலைதிரிபு எறிய – நின்ற நிலையில் நின்று உன்னைச் சூழ்ந்து கொண்ட பகை வீரர்களைப் போர் புரிந்து வெல்ல

திண் மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்றோ – நன்கு காய்ச்சிப் பற்ற வைக்கப்பட்ட வலிமையாக வேலின் இலை மற்றும் எறிபிடியின் மூட்டு உடைபட்டுச் சிதையாமல் தப்பித்தது அல்லவா

நின்வேல் செழிய – உனது வேல் செழியனே!

முலை பொலி ஆகம் உருப்ப நூறி – பொலிவான முலைகளையுடைய மார்பு வெப்பமுற அறைந்து கொண்டு

மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல் – அறிவு மயங்கி உற்ற அளவற்ற அழுகை ஆரவாரத்தை உடைய

ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர – ஒளி பொருந்திய நெற்றியை உடைய, கணவையிழந்த மனைவிமார்கள் விதவைக் கோலம் அடைந்து

அவிர் அறல் கடுக்கும் – அழகிய கருமணலை ஒத்த

அம் மென் குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே – அந்த மெல்லிய குவிந்த கரிய கூந்தலை அறுத்துக் கொண்டதைக் கண்டு

பொருளுரை:

விண்மீன்கள் விளங்கும் வானத்தின் பரந்த இருள் நீங்க விரைந்து செல்லும் வழக்க
முடைய தனது இயல்பில் தவறாது மிகுந்த வெப்பமுடன் உருவாகி உதிக்கின்ற கதிரவன் பளிச்சென்ற ஒளியுடன் திகளும் சந்திரனோடு வந்து நிலத்தில் சேர்ந்தாற்போல அங்கே விளங்கி, பொருதுதற்கு அரிய வலிமையுடைய இரு வேந்தர் வஞ்சினம் கூறினர்.

வருத்துதற்கரிய போர்க்களத்தில் அவர்களைத் தோல்வியுறச் செய்து உடலாலும் மனதாலும் வாடச் செய்தாய்! வாரால் பிணிக்கப் பட்ட அவருடைய முரசத்தை எடுத்துக் கொண்ட பொழுது, நின்ற நிலையில் நின்று உன்னைச் சூழ்ந்து கொண்ட பகை வீரர்களைப் போர் புரிந்து வென்றாய்!

பொலிவான முலைகளையுடைய மார்பு வெப்பமுற அறைந்து கொண்டு அறிவு மயங்கி உற்ற அளவற்ற அழுகை ஆரவாரத்தை உடைய ஒளி பொருந்திய நெற்றியை உடைய, கணவனையிழந்த மனைவி மார்கள் விதவைக் கோலம் அடைந்து, அழகிய கருமணலை ஒத்த அந்த மெல்லிய குவிந்த கரிய கூந்தலை அறுத்துக் கொண்டதைக் கண்டு நீ போரை நிறுத்தியதால், நன்கு காய்ச்சிப் பற்ற வைக்கப்பட்ட வலிமையாக வேலின் இலை மற்றும் எறிபிடியின் மூட்டு உடைபட்டுச் சிதையாமல் தப்பித்தது உனது வேல் அல்லவா செழியனே!

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும். ’உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணி, பிணியுறு முரசங் கொண்ட காலை நிலை திரிபு எறிந்த’ திறம் சொல்வதிலிருந்து பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரத்தையும், வெற்றியையும் உணர்தலால், இது வாகைத்திணை ஆயிற்று.

துறை: அரசவாகை.

1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.

2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.

3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகை நாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.

வஞ்சினம் கூறிய இரு வேந்தரை வென்ற திறன் மட்டுமின்றி, போரில் கணவனையிழந்த மனைவி மார்கள் விதவைக் கோலம் அடைந்து, அழகிய கருமணலை ஒத்த அந்த மெல்லிய குவிந்த கரிய கூந்தலை அறுத்துக் கொண்டதைக் கண்டு போரை நிறுத்திய உனது பிறரை நோகச் செய்யாத பண்பான நல்லியல்பும் அறியப்படுவதால் இப்பாடல் அரச வாகைத் துறையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jul-13, 12:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 496

சிறந்த கட்டுரைகள்

மேலே