புறநானூறு பாடல் 32 - சோழன் நலங்கிள்ளி
சோழன் கரிகால் பெருவளத்தானின் இளைய மகனான வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி கரிகாலன் இறந்த பிறகு பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். வேற்பஃறடக் கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். ஒரு சமயம், இவனுக்கும் இமயவரம் பனுக்கும் (அண்ணன் மருமகன்) இடையே போர் நடந்தது. அப்போரில் அவ்விரு மன்னர்களும் இறந்தனர். இவன் போரில் இறந்த பிறகு, இவன் மகனான நலங்கிள்ளி தன் தந்தையைப் போல், பூம்புகாரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான்.
இவனைச் சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் கூறுவர். ஒருசமயம், நலங்கிள்ளிக்கும் உறையூரை ஆண்டு வந்த நெடுங்கிள்ளிக்கும் போர் தொடங்கியது. அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வி யடைந்ததால், நலங்கிள்ளி உறையூரைத் தனக் குரியதாக்கி, தனது வரையா ஈகையால் புகழ் பெற்றான்.
தொண்டை நாட்டிலுள்ள கோவூர் என்னும் ஊரைச் சேர்ந்த சான்றோர் கோவூர் கிழார் இப்பாட்டில் இச்சோழன் நலங்கிள்ளியைப் பாடுகின்றார். இவர் சிறந்த நல்லிசைப் புலமையுடையவர். ஆசிரியர் கோவூர் கிழார் இப்பாட்டில் சோழன் நலங்கிள்ளி யின் வள்ளன்மையை வியந்து, ‘இத்தண்பணை நாடு அவன் எண்ணிய முடிவுக்கேற்ப செயல்படு வதால், அவன் வஞ்சியும், மதுரையும் தருவான்; அவனை நாமெல்லாம் பாடுவோம் வாருங்கள்’ என்று பாராட்டுகின்றார்.
இனி பாடலைப் பார்ப்போம்.
கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியுந் தருகுவ னொன்றோ
வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென
மாட மதுரையுந் தருகுவ னெல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டி னன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமட் குரூஉத்திரள் போலவவன்
கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே.
பதவுரை:
கடும்பின் அடுகலம் நிறையாக – நம் சுற்றத்தாரின் இல்லங்களில், உணவு சமைக்கும் பாத்திரங்கள் நிறையச் சமைக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு விலையாக
நெடுங்கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ – நீளமான கொடிகளில் பூக்காத வஞ்சியாகிய வஞ்சி நாட்டையும் தருவான் என்ற ஒன்று மட்டுமா!
வண்ணம் நீவிய – நல்ல நிறமுடைய கலவைப் பூச்சினைப் பூசிய
வணங் கிறைப் பணைத் தோள் ஒண்ணுதல் விறலியர் – வளைந்த சந்தினையுடைய (carrying angle) முன் கையினையும், மூங்கில் போன்ற தோளினையும், ஒளிபொருந்திய நெற்றியினை யுடைய விறலியர்
(வணங் கிறை – வளைந்த முன்கை)
பூவிலை பெறுக என - பூவிற்கு விலையாகப் பெறுக என்று
மாட மதுரையும் தருகுவன் – மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான்!
எல்லாம் பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள் – ஆதலால், பரிசில் மக்களே! நாம் எல்லோரும் அவனைப் பாடுவோம், வாருங்கள்!
தொன்னிலக் கிழமை சுட்டின் – இந்த பழமையான நிலத்திற்கு உரிமையுடையவன் யார் என்று நினைத்துப் பார்த்தால்
நன்மதி வேட்கோச் சிறாஅர் – நல்ல அறிவு நுட்பமுள்ள குயக்குலத்து இளையோர்
தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத் திரள் போல – மண்பாண்டங்கள் வனைவதற்கு தேர்க்காலை ஒத்த சக்கரத்தில் வைத்த பச்சை மண்ணாகிய கனத்த உருண்டை போல
அவன் கொண்ட குடுமித்து – சோழன் நலங்கிள்ளி கருத்திற் கொண்ட முடிபையுடைத்தது
இத் தண்பணை நாடே – இந்த குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு.
பொருளுரை:
இந்த பழமையான நிலத்திற்கு உரிமையுடையவன் யார் என்று நினைத்துப் பார்த்தால் நல்ல அறிவு நுட்பமுள்ள குயக்குலத்து இளையோர் மண்பாண் டங்கள் வனைவதற்கு தேர்க்காலை ஒத்த சக்கரத்தில் வைத்த பச்சை மண்ணாகிய கனத்த உருண்டை போல, இந்த குளிர்ந்த மருத நிலத்தை யுடைய நாடு சோழன் நலங்கிள்ளி கருத்திற் கொண்ட முடிபையுடைத்தது.
ஆதலால், நம் சுற்றத்தாரின் இல்லங்களில், உணவு சமைக்கும் பாத்திரங்கள் நிறையச் சமைக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு விலையாக நீளமான கொடிகளில் பூக்காத வஞ்சியாகிய வஞ்சி நாட்டையும் தருவான் என்ற ஒன்று மட்டுமா!
நல்ல நிறமுடைய கலவைப் பூச்சினைப் பூசிய வளைந்த சந்தினையுடைய (carrying angle) முன் கையினையும், மூங்கில் போன்ற தோளினையும், ஒளிபொருந்திய நெற்றியினையுடைய விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக என்று மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான்! ஆதலால், பரிசில் மக்களே! நாம் எல்லோரும் அவனைப் பாடுவோம், வாருங்கள்!
விளக்கம்:
பூத்தவஞ்சி வஞ்சிக்கொடிக்கும், பூவாவஞ்சி வஞ்சிநகர்க்கும் ஆதலால், பூவாவஞ்சி என்றார் ஆசிரியர் கோவூர் கிழார். பூவாவஞ்சி என்பது கருவூர்க்கு வெளிப்படை. வஞ்சிநகர் வஞ்சிக்கள மென்றும், பின்பு அஞ்சைகளமென்றும் மாறிய காலத்தில் கருவூர் வஞ்சியென வழங்கலாயிற்று.
விறலியர் பூவிலை பெறுக என்றவிடத்து, பூவிலை மடந்தையராகிய கூத்தியரின் நீக்குதற்கு, பூவிலை என்பதைப் பூவிற்கு விலை எனப் பிரித்துப் பொருள் கூறினார். இழை பெற்ற விறலியர், தலையில் சூடிக்கொள்ளும் பூவிற்கு விலையாக ’மாட மதுரை தருகுவன்’ என்றார்.
இவ்விரு நகர்க்குமுரிய வேந்தர் இருவரும் தன் வழிப்பட சேரநாட்டைச் சேர்ந்த வஞ்சி நகரமும், பாண்டிய நாட்டைச் சேர்ந்த மதுரை நகரமும் சோழன் நலங்கிள்ளியின் ஆதிக்கத்தில் இருந்தன எனத் தெரிகிறது.
இப்பாடல் பாடாண்திணை ஆகும். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல் புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை. ’கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப் பூவா வஞ்சியுந் தருகுவன், வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள் ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென மாட மதுரையுந் தருகுவன்’ என்பது சோழன் நலங்கிள்ளியின் கொடை, அருள் ஆகிய குணங்களைக் கூறுவதால் இது பாடாண்திணை ஆகும்.
துறை: இயன் மொழி. இந்த குளிர்ந்த மருத நிலத் தையுடைய நாடு சோழன் நலங்கிள்ளி கருத்திற் கொண்ட முடிபையுடைத்தது என்று நலங்கிள்ளி யின் இயல்பைக் கூறுதலால், இப்பாடல் இயன் மொழித் துறை ஆகும்.