விஞ்ஞானம்
1விஞ்ஞானம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
கதிரவன்தான் மறைந்தபின்பு இருளில் மூழ்கிக்
---கண்கட்டி விட்டதுபோல் இருந்த ஊரை
மதிகதிராய் மாறியதாய் வெளிச்சம் பாய
---மாயிருளை ஒளிரவைத்தோம் மின்சா ரத்தால்
குதிரையிலும் மாட்டுவண்டி தனில மர்ந்தும்
---குறுக்குவழி நடந்தெல்லாம் கனவாய்ப் போக
அதிவேகப் பேருந்து விமான மேறி
---அடுத்தநாடும் செல்கின்றோம் எளிதாய் இன்று !
நிலம்மீது துளைபோட்டே உள்ளே ஓடும்
---நீர்தன்னை மேலேற்றிப் பாய வைத்தோம்
கலப்பைதனில் உழுதமண்ணில் எந்தி ரத்தைக்
---களமிறக்கி முப்போகம் விளைய வைத்தோம்
பலவிதமாய்க் குழந்தைக்கே அழகு காட்டிப்
---பாவைமுக வடிவிற்கே உவமை சொன்ன
நிலவுதனில் கால்வைத்தோம் செவ்வாய் சென்றோம்
---நிறைந்திருந்த மறைபொருளை அறிந்து கொண்டோம்!
வீட்டிற்குள் அமர்ந்தபடி உலகந் தன்னை
---விரல்நுனியில் அழைப்பதற்குக் கணினி கண்டோம்
நாட்டிற்குள் நடக்கின்ற நிகழ்ச்சி யெல்லாம்
---நாம்நொடியில் அறிவதற்குப் பெட்டி கண்டோம்
காட்டிற்குள் மறைந்திருக்கும் கனிவ ளங்கள்
---கண்டுரைக்கச் செயற்கைக்கோள் பறக்க விட்டோம்
ஏட்டிற்குள் கதைகளாக எழுதி வைத்த
---எல்லாமும் நனவாக நேரில் கண்டோம் !
கொத்தாக உயிர்பறித்த நோய்க ளெல்லாம்
---கொல்லைவழி மருத்துவத்தால் ஓட வைத்தோம்
எத்தனையோ முன்னேற்றம் விஞ்ஞா னத்தின்
---ஏற்றத்தால் வந்ததுநம் வாழ்வில் மாற்றம்
நித்தமுமே புதியனவாய்க் கண்ட ளித்து
---நிழலாக நம்முடனே ஒன்றி னாலும்
வித்தான இயற்கைக்கே ஊறு யின்றி
---விளைந்திட்ட அறிவியலைத் துணையாய் கொள்வோம்!