எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாரணமுகத்தோனே போற்றி..!  




உலகத்தில் ஒரு நொடிக்கு நூற்றாயிரம் உயிர்கள் தோன்றுகின்றன. தோன்றியதின் நோக்கம் என்னவென்பது எவ்வுயிர்க்கும் தெரியாது, தெரிந்தால் வாழ்வென்பது கிடையாது, காலம் செல்லச் செல்ல ஒன்று மறைந்து மற்றொன்று உருவாகும், மற்றொன்று மறைந்து இன்னொன்று உருவாகும், இப்படி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதுதான் உலக நியதி, இந்த இயற்கை மாற்றத்தின் மர்மத்தை அவ்வளவு எளிதில் மானுடர்களாகிய நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.


நமக்கு எளிதில் புரியாத இதைத்தான் “மாயை” என்றான் ஒரு மானுடராய்ப் பிறந்த ஒரு மாமனிதன். சாதாரணமாக உணவு உண்டு, பிறகு தூங்கி விழித்து, விழித்தவுடன் வேறு சிந்தனை இல்லாமல் பிறருக்கு தொந்தரவு செய்து கொண்டே வாழுகின்ற மனிதர்களை அவன் வெறும் “மானுடப்பூச்சி” என்றுதான் வர்ணித்தான். நாம் மட்டுமே வாழ்ந்தால் போதுமா, பிறர் வாழ என்றாவது நினைத்தோமா?.. யார் எப்படிப் போனால் என்ன?.. இந்த எண்ணம் சரியா?.. என்கிற கேள்வியை நம் முன்னே வைத்துவிட்டுச் சென்றான். 


இப்போது விஷயத்துக்கு வருவோம்..


விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத ஒரு சிறப்பு புதுச்சேரி  மணற்குள விநாயகர் ஆலயத்தில் உள்ளது. 500 வருட பழமையான இக்கோவிலில், தனிச் சன்னிதியில், விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் பார்வதி தேவியார் ஆவார். அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்து குவிந்ததாகவும், குவிந்த மணல் திட்டாகி மீண்டும் குழி ஆனதால் அவ்விடத்திற்கு “மணற்குளம்” என்று பெயர் வந்ததாகவும் வரலாறு, இங்கே விநாயகரின் மூலவர் சன்னிதிக்கு அடியில் நீண்ட ஆழமான நீர் உள்ள கிணறு இருப்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அறிந்திருந்தால் பிறருக்குத் தெரிவியுங்கள்.


மேலே சொன்ன அந்த மாமனிதனுக்குத் தன்மனதில் சலனம் தோன்றும்போதெல்லாம் இந்த ஆலயத்துக்கு வருவான்.    மணக்குள விநாயகரை மனம் குளிர நினைப்பான். அன்றும் மனது சலனமுற்றது, எழுது கோலை எடுத்தான். விநாயகனைத் துதித்தான், “விநாயகர் நான்மணிமாலை” என்பதைத் தொடுத்தான். மனதிலே சலனம், மதியிலே இருள் இல்லா நிலை, நின்னை நினைக்கும்போது மோன நிலை வேண்டும் என்கிற எழுத்துக்களை மாலையாகக் கோர்த்தான்.


அவன்தான் மஹாகவி என்று அனைவராலும் போற்றப் பட்ட பாரதி. மேலே கூறியவற்றைப் பற்றி சிந்தனை செய்தான், வேதனை அடைந்தான், எது எப்படி இருந்தாலும், உன்னைத் துதித்து, செல்வம் பல பெற்று, ஒரு நூற்றாண்டு வாழ்வேன் என்னும் சபதமும் எடுத்தான்.


எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி!

மனத்திற் சலன மில்லாமல்

மதியில் இருளே தோன்றாமல்


நினைக்கும் பொழுது நின் மவுன

நிலைவந் திடநீ செயல் வேண்டும்

கனக்குஞ் செல்வம் நூறு வயது

இவையும் தரநீ கடவாயே!..



ஆனை முகத்தானின் அழகைக் கண்டு, மேலும் அவனைப் போற்றி, வாழ்க, வெல்கவென்றும் புகழ் பாடுகிறான், பாட்டுக்கோர் புலவன் பாரதி.


கற்பக விநாயகக் கடவுளே போற்றி!

சிற்பர மோனத்தேவன் வாழ்க!

வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!

ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!



பானை வயிற்றானைத் வழிபடும் இவ்வேளையில்,

பாரதியின் "பா" கொண்டு துதிப்போம்..!..இப்பிறப்பில்

பலனனைத்தும் பெறுவோம்..!


வேழமுகத்தான் அவன்..

*******வினைதீர்க்க வருவான்.!

வேகமாக வருவான்..

*******வாகனத்திலும் வருவான்.!

வகையான மோதகத்தையவன்..

*******வருமுன்னே தயார்செய்யுங்கள்..!

===============================
எழுத்து தள அன்பர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்..!

அன்புடன் பெருவை பார்த்தசாரதி

மேலும்


மேலே