எண்ணம்
(Eluthu Ennam)
மக்கள் தொகை-அதிகரிக்கும் பிரச்னைகள்
மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தகவல்கள் சில மகிழ்ச்சிகளையும் சில கவலைகளையும் ஒன்றாக முன்வைத்துள்ளன. மகிழ்ச்சி கொள்வதற்கான காரணம், மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் குறைந்துள்ளது. எழுதப்படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. கவலையடைவதற்கான காரணம், ஆறு வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.இந்திய மக்கள் தொகை 128 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலக மக்கள் தொகையில் 17.5 விழுக்காடு இந்தியர்கள் என்கிறபோது மகிழ்ச்சியாக இருந்தாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் சீனாவைக் காட்டிலும் அதிக மக்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்கிற கணிப்பு, உணவு மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த அச்சத்தை உருவாக்குகிறது.
மக்கள் தொகை அதிகரிப்பு 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 21.54 விழுக்காடாக இருந்தது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்த வேகம் குறைந்துள்ளது. 17.64 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை உயர்ந்துள்ளது. அதாவது 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர். மாநிலங்களைப் பொறுத்தவரை, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களின் வரிசையில் 7-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 6 விழுக்காடுதான் தமிழக மக்கள் தொகை. அதிகபட்சமாக 16 விழுக்காடு மக்கள் உத்தரப்பிரதேசத்தில் வாழ்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு 15.6 விழுக்காடுதான். தேசிய அளவைக் கணக்கிடும்போது இது குறைவு. இதுபோன்று கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையிலும்கூட தமிழகம் குறிப்பிடும்படியான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. கல்வியறிவு பெற்ற பெண்கள் தமிழகத்தில் 73 விழுக்காடாகவும், ஆண்கள் 86 விழுக்காடாகவும் இருப்பதே இதற்குச் சான்று.
தேசிய அளவில் ஏழு வயதுக்கு மேற்பட்டோரில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74 விழுக்காடு. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் கவலை தெரிவித்துள்ள புள்ளிவிவரம் பெண் குழந்தைகள் குறித்தது. ஆறு வயதுக்குள்பட்ட சிறுவர்கள் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, 1000 சிறுவர்களுக்கு 914 சிறுமியர் மட்டுமே உள்ளனர் என்பதுதான். இந்தியாவில் இந்த அளவுக்குக் குறைவாக இருந்தது இல்லை என்பதுதான் இந்தக் கவலைக்குக் காரணம். 1961 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 1000 சிறுவர்களுக்கு 978 சிறுமியர் இருந்தனர். இந்த விகிதாசாரம் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 927- ஆகக் குறைந்தது. இப்போது 914 ஆகக் குறைந்துள்ளது. தற்போது இந்தியாவில் சிறுவர்களின் எண்ணிக்கையே 15.88 கோடிதான். இது 2001 கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 0.5 விழுக்காடு குறைவு. இது மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்து வருவதற்கான அடையாளம் என்று மகிழ்ச்சி அடையும் அதேவேளையில், சிறுமியர் எண்ணிக்கை குறைந்துவருவது ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்காது. அதற்காகத்தான் அனைவரும் கவலைப்படுகிறார்கள்.
இருப்பினும், பொதுவாக ஆண்- பெண் விகிதாசாரத்தைக் கணக்கிடும்போது 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் இருக்கின்றனர். 2001 கணக்கெடுப்பில் 933 பெண்கள் மட்டுமே. ஆகவே, பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்திருக்கிறது. அப்படியானால் சிறுமியர் எண்ணிக்கை மட்டும் குறைந்திருப்பது ஏன்?இந்த நிலைமை இயற்கையாக ஏற்பட்டது அல்ல என்பதும், பெண்சிசுக்கள் வேண்டாம் என்கிற மனநிலை பொதுவாக இந்தியா முழுவதிலும் பீடித்திருக்கிறது என்பதும்தான் சிறுமியர் விகிதாசாரம் குறைவதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. நகர்ப்புறங்களில் பெண்சிசுக் கருக்கலைப்பு அதிகரிப்பதும் கிராமங்களில் பெண்குழந்தைகளை கொன்றுவிடுவதுமான நடைமுறைகள்தான் சிறுமியர் விகிதம் குறைவதற்கான காரணம் என்று கூறுகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்சிசுக் கொலை என்பதை தடுப்பதில் அதிமுக, திமுக இரு அரசுகளும்ம தீவிரமாகச் செயல்பட்டன. அதன் விளைவு பெண்சிசுக் கொலைகள் குறைந்துவிட்டன. இப்பாதகச் செயலை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு அறிமுகம் செய்த தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தொடக்கத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் வந்தாலும், தற்போது தொட்டில் குழந்தைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துவிட்டது என்பதே, மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மனமாற்றத்தைக் காட்டுகிறது.கருவிலேயே பெண்சிசுவைக் கண்டறியும் மருத்துவச் சோதனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் நகர்ப்புறங்களில் இத்தகைய சோதனைகள் தடையற்று நடைபெறுவதாகவும், பெண்குழந்தைகளை சுமையாகக் கருதும் குடும்பங்கள் கருக்கலைப்பு செய்வது தொடர்ந்து நிகழ்வதும்தான் இவ்வாறு சிறுவர் சிறுமியர் விகிதாசாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் என்பது மகளிர் நல அமைப்புகள், களப்பணியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
சிறுமியர் எண்ணிக்கை எந்தெந்த மாநிலங்களில் குறைந்துள்ளதோ அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அரசின் கடமை.இந்திய அரசியல்வாதிகளின் ஊழல், அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக பணக்காரர், ஏழைகள் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. விவசாயம் செய்வோர் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், 121 கோடி மக்களின் உணவுத் தேவையை இந்தியா எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதுதான் இப்போது எழுகின்ற கேள்வி. இந்தியாவில் வறுமையும் உணவுப்பஞ்சமும் அதிகரிக்குமானால், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் குற்றங்களும் அதிகரிக்கவே செய்யும். மக்கள் தொகை அதிகரிக்கும் வேகம் குறைந்துவிட்டது என்று மெத்தனமாக இருக்காமல் அரசு செயல்படுவதோடு, இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் கடமையாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், இனக் குழுக்களின் ஒருங்கிணைப்பாக இந்தியா விளங்குகிறது. இந்தியா உலகின் பரப்பளவில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆனால் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை 2050ம் ஆண்டுக்குள் பெற்றுவிடும். தற்போது உலகின் மிக அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்ற பெருமை நம் நாட்டுக்கு உள்ளது.
இது நம் நாட்டின் பலம் என்றும் அதன் மூலமாகத்தான் இந்தியா வல்லரசாக போகிறது என்று ஒரு தரப்பினரும், இது நம் நாட்டின் சாபக்கேடு என்பவர்கள், ‘‘குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பதாலும், அதை இங்கேயே அதிக விலைக்கு விற்க முடியும் என்பதால் உலக நாடுகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை நம் நாட்டில் அமைக்கின்றன’’ என்கின்றனர். மக்கள்தொகையில் உலகின் முதல்நாடாக மாறி அதன் மூலம் இந்தியா உலகின் வல்லாதிக்க சக்தியாக, வல்லரசாக என்றோ உருவாகப்போகிறது என்றே வைத்துக்கொள்வோம். இந்த மக்கள்தொகை பெருக்கத்துக்கு இதுவரை நாம் கொடுத்துள்ள விலை என்ன. இதனால் ஏற்பட்ட, நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிற பாதிப்புகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன்.
அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் என்பது வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் பேராபத்து தான். ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகளுக்கு கல்வியறிவு வழங்க வசதி இருக்கிறதோ அத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம். நம் நாட்டில் 1980களுக்கு முன் பல குடும்பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்ச தேவையான உணவு, உடை, உறைவிடம் கூட இல்லாமல் இருந்தனர். இன்றைய காலகட்டத்தில் பெருநகரங்களில் சாலையோரங்களில் குடிசையில் வாழ்கிறார்கள். வடசென்னையில் சில பகுதிகளில் இரவில் இன்றும் சாலையின் இருபுறங்களிலும் மக்கள் படுத்து உறங்குவதை நாம் பார்க்க முடியும். அவர்கள் வருமான வரி கட்டும் அளவுக்கு சம்பாதிக்காவிட்டாலும் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் வரி சேர்த்தே விலை தருகின்றனர்.
நாட்டில் பலர் இன்னும் 30 ரூபாய்க்கு குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பல கோடி பேர் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகின்றனர். இதற்கு மக்கள் தொகை பெருக்கம்தான் காரணம் என்கிறார்கள் ஆளும் தரப்பினர். மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் அரசின் திட்டங்கள் எல்லோருக்கும் போய் சேர்கிறதா என்பதை கண்காணிக்க முடியவில்லை என்கிறார்கள். நம் நாட்டில் மக்கள்தொகை அதிகம் என்பதால் இங்கு மனித உயிர் பெரிய அளவில் மதிக்கப்படுவதில்லை. சாலை விபத்தில் சிக்கினால் கூட, வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்துக்கு நடையாய் நடக்க வேண்டியிருக்கும் என்று யாரும் உதவுவதில்லை. நம் நாட்டில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத நிலையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் உள்ள மேற்கத்திய நாடுகளில் ஒரு விலங்கு விபத்தில் சிக்கினால் கூட அவற்றை காப்பாற்றி உரிய சிகிச்சை அளிக்கிறார்கள். அதற்கென அதிகாரிகளும் நியமிக்கப்படுகின்றனர்.
நார்வே நாட்டில் மனித உரிமைகள் தொடர்பான விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. அங்கு கருவில் இருக்கும் குழந்தைக்கு, வீட்டில் தனி அறை இருந்தால் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இல்லாவிட்டால் உடனடியாக கருக்கலைப்பு செய்யப்படும். நம் நாட்டில் தெருவில், ஆட்டோக்களில். பஸ் ஸ்டான்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். நம் நாட்டில் வாகன நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. வெளிநாடுகளில் விலங்குகளை காப்பாற்ற தனிப்படை அமைக்கப்படுகிறது. இங்கு நாம் மக்கள்தொகை பெருக்கத்தால் வனவிலங்குகளின் வாழிடத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைக்கிறோம்.
நீ்ர்நிலைகளை அமைத்து விவசாயம் செய்கிறோம். சிறிது நாட்களில் விற்று வீட்டுமனைகளாவோ, தொழிற்சாலைகளாகவோ மாற்ற உதவுகிறோம். நம் நாட்டில் தீயணைப்பு படையினரும், வனத்துறையினரும் வனவிலங்குகளின் வாழிடத்தில் அவற்றிடமிருந்து நம்மை பாதுகாக்க அவற்றை கொல்கின்றனர். மக்கள்தொகை கட்டுப்பாட்டில் இருந்தால் தான் ஒரு நாடு, மக்களின் தேவையை திட்டமிட முடியும். அவ்வாறு திட்டமிடப்பட்டு எல்லாம் நடப்பதே எல்லாருக்கும் நல்லது. எங்கும் நெரிசல்; எல்லா இடங்களில் வரிசை எல்லாவற்றையும் தாமதப்படுத்தி விடுகிறது. அதனால் நம் அரசு, மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நியாயமான முயற்சிகளுக்கு நாமும் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சான கதை ஆகிவிடும்.