எண்ணம்
(Eluthu Ennam)
காடுகளும் அதன் பயன்களும்
மனித இனத்திற்கு ஆதாரமாக உள்ள ஆறுகள், ஏரி யாவும் அடர்ந்த வனப்பகுதிகளிலே உற்பத்தியாகி மனித தேவையை நிறைவு செய்கின்றன. இன்று நம் வீட்டில் பயன்படுத்தும் அழகு பொருட்கள், மேசை, நாற்காலி, வாசற்கதவு என நாம் காணும் அனைத்தும் மரங்களில் உருவானவையே. இதெல்லாம் காடுகள் நமக்களிக்கும் செல்வங்கள். செய்திதாள்கள், புத்தகங்கள், பென்சில், காகிதங்கள் இல்லாத உலகை கற்பனை செய்ய இயலாது.
இவையெல்லாம் காடுகள் நமக்களிக்கும் கொடைகள். இவற்றை பல தலைமுறைகளுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமே ஒழிய, 'பொன் முட்டையிட்ட வாத்தை, ஒரே அடியாக அறுத்த கதை' ஆக மாறிவிடக் கூடாது. இதை தவிர காடு சார்ந்து கிடைக்கும் தேன், பிசின், இறந்து போன யானைகளின் தந்தங்கள், போன்ற எண்ணிலடங்கா பொருட்கள் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிறகும் மேலாக நமக்கு தேவையற்ற கார்பன்-டை-ஆக்சைடை உளவாங்கி கொண்டு நாம் உயிர் வாழ தேவையான ஆக்சிசனை நமக்களிக்கிறது. இதை மனிதனால் செயற்கையாக உற்பத்தி செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. காடுகளை பாதுகாப்பதால் நாம் பல தலைமுறைகளுக்கு பொருளாதார ரீதியாகவும், உயிர் வாழ தேவையானவற்றையும் மனித சமூகம் பெறுகிறது. காடுகளை அழிப்பதால் அப்போது மட்டுமே பலன்கள் கிடைக்கும். நீண்ட கால பலன்கள் கிடைக்காது. அதனால் அடுத்த தலைமுறையினர் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாவர்கள் என்பது உறுதி.