எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருப்பு பணம் : அரசியல் உண்மைகள் – நூல் அறிமுகம்

கருப்புப் பணம் என்பது சட்ட விரோதமான முறையில் சம்பாதித்த பணம், அரசியல்வாதிகள் ஊழல்களின் மூலம் கொள்ளையடித்த பணம் என்பதும் பணக்காரர்களின் நிலவரை பெட்டிகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்பதுவுமே பாமரர்கள் மட்டுமின்றி படித்தவர்களிடமும் நிலவும் கருத்தாகும்.

கீழைக்காற்று வெளியீட்டகம் நூலாகக் கொண்டு வந்துள்ள கருப்பு பணம்: அரசியல் உண்மைகள் என்ற தலைப்பிலான கட்டுரைகள் கருப்புப் பணம் புழங்கும் மாய உலகத்திற்குள் வாசகரை அழைத்து சென்று அதன் உருவாகத்தையும் கையாளப்படும் விதங்களையும் அது குடி கொண்டிருக்கும் இடங்களையும் திரை விலக்கிக் காட்டுகிறது.

கருப்புப் பணம் என்பது என்ன, அது எங்குள்ளது, யார் கட்டுப்பாட்டில் உள்ளது, எப்படி கையாளப்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கின்றன இந்நூலில் உள்ள கட்டுரைகள். மேலும், கணக்கு காட்டாமல் கொள்ளையடித்த பணம் கருப்பை வெள்ளையாக்குவதற்கு சட்ட பூர்வமாகவே இருக்கும் வழிமுறைகள் மூலம் வெள்ளையாக்கி சுழற்சியில் விடப்படுகிறது என்பதையும் விளக்குகிறார் ஆசிரியர்.

பொருளாதாரம் கடினமானது, மக்களுக்கு புரியாது என்ற பெயரில் கருப்பு பணம் பற்றி தெளிவில்லாத மேம்போக்கான கருத்துக்களை வெளியிட்டு ஊடகங்களும் கூட மக்களை அறியாமையில் நீடிக்க செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் கருப்புப் பணம் பற்றி எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலான கட்டுரைகளை தொகுத்து தருகிறது இந்நூல்.

தேர்தல்களில் வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கு மட்டும் இந்திய ‘ஜனநாயகத்தில்’ பங்காற்றி வந்த கருப்பு பணம் 2011-ம் ஆண்டில் முக்கிய நிகழ்ச்சி நிரலுக்குள் வந்த பின்னணியை விளக்குகிறது இந்நூல். 2G, ஆதர்ஷ், காமன்வெல்த் என பல்வேறு ஊழல் விவகாரங்கள் அம்பலமானதாலும், விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடிகளாலும் உருவான மக்கள் கொந்தளிப்பை ஆற்றுப்படுத்த கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவை வளப்படுத்த வேண்டும் என்று காந்தியவாதி அன்னா ஹசாரே முதல் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவ் வரை கருப்புப் பணம் பற்றி பேசாதோரே இல்லை.

மக்கள் கொந்தளிப்பை அறுவடை செய்துகொள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவை வளப்படுத்துவோம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது, பா.ஜ.க. 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு வந்து நாட்டு மக்களின் வங்கிக்கணக்குகளில் தல பல லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்று சவடால் அடித்தார், மோடி. ஆனால் இன்று வரை வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய முதலாளிகளின் பட்டியலை வெளியிடக்கூட மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு முன்வரவில்லை.

இந்தியப் பொருளாதாரம் ஏறு முகத்தில் இருப்பதாகவும், கூடிய விரைவிலேயே இந்தியா வல்லரசாகிவிடும் என்றும் மேட்டுக்குடி வர்க்கம் சவடால் அடித்து வரும் நிலையில் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பிய இந்திய அரசால் இணைப் பொருளாதாரத்தில் புழங்கும் பல பத்து லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலா கருப்புப் பணத்தில் ஒரு பைசாவைக் கூட மீட்க முடியவில்லை.

இப்போது மட்டுமல்ல எப்போதும் இவர்களால் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர முடியாது என்று 2011-ல் வெளியான கட்டுரையில் விளக்கப்பட்டிருப்பதை நிரூபிக்கும் விதமாக, முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் கருப்புப் பண பட்டியலை வெளியிட மறுத்ததற்காக நாடாளுமன்றத்தில் சண்டமாருதம் செய்த பா.ஜ.க, ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் பாடிய அதே பல்லவியை பாடுகிறது. ஊடகங்களின் தாளம் மட்டும் வேறாக உள்ளது.

அன்று, ‘ஊழல் பெருச்சாளிகளான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு வங்கிகளில் பணம் இருப்பதால் தான் அவர்கள் பட்டியலை வெளியிடவில்லை’ என்பது போல பிம்பத்தை ஏற்படுத்தின, அன்று துக்ளக் உள்ளிட்ட பத்திரிக்கைகள். அதே பத்திரிகைகள் இன்று கருப்பு பண விவகாரத்தில் காங்கிரசின் விளக்கங்களை தாங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என பொழிப்புரை வழங்குகின்றன. இவர்கள் இப்படி குரங்கினும் கேவலமாக பல்டி அடிப்பது ஏன் என்பதையும் இந்த நூலிலிருந்து புரிந்து கொள்ளலாம்..

நிலப்பதிவின் போது முத்திரைத்தாள் வரியை குறைக்க கொஞ்சம் வெள்ளையாகவும், மீதி கருப்பாகவும் கைமாற்றப்படும் என்று ‘அந்நியன்’ படப் பாணியிலும், கருப்புப் பணம் அத்தனையும் வெளிநாட்டு வங்கிகளில் கட்டுகட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று ‘கந்தசாமி’ பட பாணியிலும் புரிந்து வைத்திருப்போர் கட்டாயம் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல் இது.

மேலும்


மேலே