ஆளுக்கு ஓர் அலை கொடுத்தால் அவளுக்கு நதி
ஒடுக்கும் பனி
ஓடி மறைந்த தென்று
அறிக்கை வெளியிட்டது கிழக்கு
அச்சகம்.
கையில்
அதைத் தாங்கி வந்து
தமிழர் வீட்டுக் கதவுகளைத்
தட்டுகிறாள் தை.
இதுவரை
நடுங்கிய பொழுதுகள்
பருகப்
பகல் கிண்ணத்தில்
சுடச் சுட வெப்பம்.
முடங்கிக் கிடந்த காற்று
சூரியத் தணலில்
குளிர் காய்ந்து புறப்பட்டு வருகிறது.
மாதங்களில் சிறந்தது
மார்கழி என்றார்கள். புரிகிறது;
அதுதானே தவமிருந்து
பெற்றெடுத்தது தையை!
களத்து மேட்டுப்
பதர்க் குப்பை அவள்
ஆடையெல்லாம்.
உதறிவிட நேரமின்றி அப்படியே
ஓடிவந்துள்ளாள்.
உடனே அணைத்துக் கொள்வோம்!
அகிலும் சந்தனமும்
நிகராகுமா இந்தக் குப்பைக்கு?
அசலாய்ச்
சிரிக்கத் தெரிந்தவர்கள்
ஆளுக்கொரு
புன்முறுவல் தந்தால்
அவளுக்கு மாலை கட்டலாம்.
ஆளுக்கு ஓர்
அலை கொடுத்தால்
அவளுக்கு நதி செய்து வைக்கலாம்.
தை மகளின்
சுந்தரத் தோணி ஒவ்வொரு
துறைக்கும் போகும்.
கூட இருந்தே குழி வெட்டும்
நிபுணர்களின்
கூடாரத்தைச் சேராதவர்கள்
ஆளுக்கொரு புள்ளி
கொடுத்தால்,
வாசலில் போட்டு வைக்கலாம், அவளுக்குப்
பூக்கோலம்.
இது
உழைப்புக்கு உற்சவ நாள்!
கைதட்டிக் கைதட்டியே
காலை வாரிவிடும் கலையில்
வல்லவர் நாம்! எனவே
உழைப்பைப் பாராட்ட
உதடுகளால் உத்தியோகம்
பார்க்க வேண்டாம்.
வேர்வைகளை அதற்கு அனுப்பி வைப்போம்.
உழைப்பதே
உண்மையில், உழைப்பைப்
போற்றுவதாகும்.
பாட்டாளி கரங்கள்
பார்பெற்ற வரங்கள்.
வேர்வையைப் பாராட்டிப்
பட்டங்கள்
தரவேண்டாம்.
காகிதச் சொப்பனங்கள்
கஞ்சிக்கு வழி செய்யுமா?
பாட்டாளிக்கே
உலகம் சொந்தமென்று
பட்டா போட்டுக் கொடுப்போம்.
நகம்
வளரும் விரல் அல்ல
அவன் விரல், உலகின்
சுகம் வளரும் விரல்!
அவன்
கை மடங்கினால் - உலகின்
மெய்ம்முடங்கிப் போகும்!
விளக்குகள்
உற்பத்தி செய்தவன் தொடர்ந்து
இருட்டிலேயே கிடந்தால்
அந்த
விளக்குகளே வெடித்துச் சிதறும்.
பயிர் செய்தவனுக்குப்
பட்டினி என்றால்...
கருப்பையை வயல்கள்
கழற்றி எறிந்துவிடும்.
போகி நெருப்பு..
ஒவ்வாமைகள் மேல்
உறுமும் சினத்தில்
உரசிப் பற்றியது!
தண்டிக்கப்பட்ட தீ
சுருட்டு நுனியில்!
சபிக்கப்பட்ட தீ...
மதவெறியர் கண்களில்!
வெறுக்கப்பட்ட தீ,
சுய நல வேள்விகளில்!
போற்றப்பட்ட தீ,
போகிப் பண்டிகையில்!
கொண்டை அடுப்புக்குக்
கோலம் புரியும் முன்,
அடுப்பாசனத்தில் புதுப்பானை
பதவி ஏற்கும் முன்,
வெள்ளையடித்து, வீட்டிற்குள்
வெளிச்சத்திற்குப்
பாய் விரிக்கும் முன்,
வேண்டாப் பழமைகளுக்கு
விடை கொடுக்க வேண்டாமா?
வாசல்
பெருக்காவிட்டால்
குப்பையிலே போட்ட கோலம்
கோவென்று அழாதா?
புதிய தளிர்கள்
ஏற்கச்
சருகுகளை உதிர்க்கத்
தயங்குவதில்லை வனங்கள்!
சபை வைத்துச்
சருகுகள் பாடும் சங்கீதத்தால்
ஓய்வதில்லை, மனித மனங்கள்!
ஆகாத பழமைக்கு
இன்னும் என்ன அலுவல்?
புதியன
புக விடுவோம்! ஆனால்
பழையன கைவிடோம்!
அஞ்ஞானத்தை, இடுப்பில்
முடிந்து வைத்துக் கொண்டு
அறிவின்
பிரசாதத்துக்குக்
கையை நீட்டுகிறோம்!
ஆகா! என்ன சமரசம்!