காலைக் காவியத்தில் புதுக் காண்டம்

சித்திரை வந்தது...

காலைக்காவியத்தில், புதுக்
காண்டம் திறந்தது...

உங்களுக்கென்ன
வேலையில்லாத் திண்டாட்டமா?

ஓடைகளே!
உறங்கும் அலைகளை எழுப்பிக்
கொண்டாடுங்கள்.

தையின் மகுடத்தைத்
தட்டிப் பறித்த சித்திரை கைகளில்
குலுங்கின வளையல்கள்...

உங்களுக்கென்ன
பஞ்சமா? பட்டினியா?
பங்கீட்டுக் கடைகளில் பரிதவிப்பா?

பூக்களே!
உதடுகள் பூட்டிவைத்த
புன்னகைப் புதையலை
அள்ளிப் போடுங்கள் தெருக்களில்;
போவோர் வருவோர்
எடுத்துப் போகட்டும்!

வெப்பப் பங்குனிக்
கர்ப்பத்தில் பிறந்த சித்திரை,
பாலுக்கு
வருட மார்பை வருடுகின்றது.
காற்றுச் சுளைகளில்
தாலாட்டுக் கசிகிறது...

உங்களுக்கென்ன
ஆரோக்கிய வசதிகள் அடைபட்டுப்
போயினவா?
மருந்துகளிலும் மரணமா?

கலாப மயில்களே! உங்கள்
நாட்டியக் கல்லூரிகளில்
பட்டமளிப்பு விழாக்களை நடத்துங்கள்...
குத்துவிளக்கேற்றி வைக்கக்
குயில்களைக் கூப்பிடுங்கள்...
உச்சரிப்பைச் சிவப்பாக்கும்
பச்சைக் கிளிகளைப் பேசக்
கூப்பிடுங்கள்!


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:18 pm)
பார்வை : 17


பிரபல கவிஞர்கள்

மேலே