நினைவை இழந்தபோதும் தமிழை இழக்காதவன்

பாரதிதாசா!
உன்னைக் கனகசபை எழுதியபோது
நீ
சுப்பிரமணியர் துதி அமுது!

எட்டையபுரத்தான் உன்னை எழுதியபோது
நீ
கதர் இராட்டினப் பாட்டு!

ஈரோட்டுப் பெரியார் உன்னை
எழுதியபோது நீ
புரட்சிக் கவிஞன்!

உன்னை
வருணித்தால் என் வார்த்தையின்
மார்பே
அகலமாகி விடும்!

ஓ!
ஒற்றைச் சொல்லில்
ஒரு நூறு ஒலிம்பிக் மைதானங்கள்!
அகல நீளங்களில்
அகப்படாமல் விரிந்தவன் நீ!
விசாலமானவன் நீ!

உன்
பெருமிதத்தைப்
பங்கிட்டுக் கொடுத்தால்
பத்து மதகளிறுகள் படை நடைபோடும்!

பரணியின்
இரத்தம் சொட்டும் சந்தங்கள்
கிடைத்தால் உன்
பார்வையைக் கொஞ்சம்
பாடிப் பார்க்கலாம்!

விலகல் கடிதம்
கொடுத்துவிட்டுப் புல்லாங்குழலிலிருந்து
வெளியேறிய பாட்டு
உன்னைச் சந்தித்தது! அந்தச் சந்திப்பில்
பாட்டுக்கு
மீசை முளைத்தது!

திசைகளைத் திருப்பி வைக்கும்
மானுடன் தோளின்
மகத்துவத்தைப் பாராட்டக்
கடல் ஓசைகளை அது
கைகளில் அள்ளியது!

உனது
வாக்கியங்களில் ஒன்றிரண்டைக்
கேட்டதும்
வயதுக்கு வந்தன எரிமலைகள்!

பூவனங்களை விட்டுப்
புறப்பட்டு வந்த பூக்கள் உன்
பாவினங்களில் இடம் கேட்டுக்
கோரிக்கை
கொடுத்தன!

உன்
வல்லினப் பாட்டுகள்
வருகின்ற வழியெல்லாம்
ஆரத்தித் தட்டோடு
அணிவகுத்து நின்றன மெல்லினமும்
இடையினமும்!

தன்னலத் தீவில் இருப்பவனுக்கு
அலைகளில் எல்லாம்
அச்சம் அச்சடிக்கப் பட்டிருக்கும்!

நீயோ
கனவுகள் காணட்டும்
தமிழ்த்தாய் என்று உன் கண்களையும்
தானம் செய்தாய்!
அந்த
உபரிக் கண்களில் உறக்கம்
வந்தால் அல்லவா அவள்
கனவு காண்பாள்!

இலைகளைக் கழித்துவிட்டால்
கிளைகள் மீதமாகும்!
கனிகளைக் கழித்துவிட்டால்
மரம் மீதமாகும்!
வேரையே கழித்துவிட்டால்
வேறென்ன மீதமாகும்?

கோபத்தைக்
கழித்துவிட்டால் அப்புறம்
பாரதிதாசன் ஏது?
சினத்தால்
சிவந்து போன நியாயங்களின்
முக அழகு
எந்த ரோஜாப் பூவில் உண்டு?
இருட்டின் மார்பில்
கீறல் போடும் சூரிய ரேகையின்
அழகு... உனது
வார்த்தைகளில் உண்டு!

உன்
ஆத்திரக் கவிதைகள்
சமுதாயத்தின் மேல் தொடுத்தன
அதிரடித் தாக்குதல்!

தெறித்த
இரத்தத்துளிகள்
திலகங்களாய் விழுந்தன
விதவையர் நெற்றி மேடுகளில்!

தீபப் பிழம்புகளாய்
விழுந்தன இருண்டு வீடுகளின்
மலட்டுச் சிம்னிகளில்!

நடவு செய்த தோழர்களின்
கூலி
நான்கு அணாக்களை உன்
கோப நெருப்பு உருக்கிச்
சம்மட்டி தயாரித்தது!

உடைபட்டுக்
கிழக்கிலிருந்து உதிருமா
புலரிகள்
உழைப்பவர் வாசல்களில்?


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:24 pm)
பார்வை : 22


மேலே