குறைப்பிறவி!
நித்திரை யின்றி உணவுமின்றி - மன
நிம்மதி யின்றிப் பொலிவிழந்து - துயர்ச்
சித்திரம் போலப் படுக்கையிலே - அவள்
சேர்ந்திருக்க - முகம் சோர்ந்திருக்கக் - கண்டு
பத்தரை மாற்றுப் பசும்பொன்னின் - உடல்
பற்றிய நோயினைப் போக்கிடவே - ஒரு
வைத்திய னாய்நான் பிறந்தேனா? - அவள்
வாச மலர்க்கை பிடித்தேனா?
ஆதிரை போலவே கண்ணழகும் - இடை
அசையும் அழகும் நடையழகும் - கொண்ட
மாதிடம் சென்று நெருங்கிநின்றே - ‘உன்றன்
மனத்துக் கவலை மடிந்துவிடும் - அடி
நீ, திட மாயிரு உன்கனவு - இனி
நிச்சயம் வென்றிடும்’ என்றிடவே - ஒரு
சோதிட னாய்நான் பிறந்தேனா? - அவள்
சுந்தரப் பொற்கை பிடித்தேனா?
விண்ணைக் கிழித்திடும் மின்னல்நிறம் - பகல்
மேக நிறம் அந்தி வானநிறம் - இரு
கண்ணைக் கவர்ந்திடும் கிள்ளை நிறம் - தேக்கு
காட்டும் நிறம்செந்நெற் காட்டுநிறம் - சோலை
வண்டு நிறம் இன்னும் என்னென்னவோ - நிறம்
வாய்த்த வளைகாட்டிப் போட்டிடவே - அவள்
வண்ணக் கரத்தைப் பிடித்தேனா? - ஒரு
வளையல் காரனாய் வந்தேனா?
என்ன பிறப்படா என்பிறப்பு! - சே! சே!
என்ன பிழைப்படா என்பிழைப்பு! - சுவைக்
கன்னற் கவிதை மொழியுடையாள் - துள்ளும்
கயலைப் பழிக்கும் விழியுடையாள் - அந்த
அன்னம் அருகினில் போயமர்ந்து - மின்னும்
அழகுக் கரம்தான் பிடித்தேனா? - தினம்
என்னை மறந்து களித்தேனா? - நான்
ஏற்ற பிறவி எடுத்தேனா?