என்னடி செய்வாய்?

என்னைப் பார்த்திட வேண்டாம் போங்கள்
என்றே பிணங்கும் பெண்ணே!
இன்துயி லாய்உன் கண்ணிற் புகுந்தால்
என்னடி செய்வாய் கண்ணே!

என்னை நினைத்திட வேண்டாம் போங்கள்
என்றே ஊடும் பெண்ணே!
இன்பக் கனவாய் இரவில் வந்தால்
என்னடி செய்வாய் கண்ணே!

என்னைத் தொடர்ந்திட வேண்டாம் போங்கள்
என்றே ஓடும் பெண்ணே!
இனிக்கும் தேனாய் இதழில் விழுந்தால்
என்னடி செய்வாய் கண்ணே!

என்னை நெருங்கிட வேண்டாம் போங்கள்
என்றே முறைக்கும் பெண்ணே!
இருள்வண்டாய் உன் கூந்தல் நுழைந்தால்
என்னடி செய்வாய் கண்ணே!

என்னைத் தழுவிட வேண்டாம் போங்கள்
என்றே திமிரும் பெண்ணே!
இளமென் காற்றாய் மேனியைத் தொட்டால்
என்னடி செய்வாய் கண்ணே!


கவிஞர் : மீரா (கவிஞர்)(9-Mar-12, 6:37 pm)
பார்வை : 36


பிரபல கவிஞர்கள்

மேலே