காலைப் பறவை...

நேற்றைய ஏமாற்றங்கள்
இனம் புரியா பயங்களாக
எழுதா நிழலாய் உடன் வர
நெடு நாளாய்த் தடைப் பட்ட
காலை நடை இன்று
தொடர்ந்தது
அழகிய பழைய மதுச் சீசாவில்
அன்றைய தாமரைப் பூவை சொருகி
வழக்கம் போல் பத்தி கொளுத்தி
சிகைதிருத்தகம் மணக்க வைத்து
வாசலில் அமர்கிறான்
புகையும் பீடி தந்திப் பேப்பர் சகிதமாய்
படித்துச் சொல்லவும் முடி திருத்தவும்
வாடிக்கை எதிர் பார்த்து
நான் வெறுமே கடப்பதை
ஏமாற்றப்புன்னகையுடன்
ஜீரணிக்கிறான்..
தந்தையர் விழிக்கும் முன்
சேரிக்குள் காலி பிராந்திக் குப்பிகள்
முந்திச் சேகரித்த பிள்ளைகள்
பழைய இரும்புக் கடை திறக்க
காத்திருக்கின்றன
உரசுகிறாற் போல் வந்து
பாதையோரத்தின்
புழு கொத்தி
பட்டென்று பறக்கிறது
பறவையொன்று


கவிஞர் : கலாப்ரியா(21-Apr-12, 5:49 pm)
பார்வை : 45


பிரபல கவிஞர்கள்

மேலே