வானம்பாடி..

மன்மத ராஜ்ஜியத்தில்
மறுபடியும் ஓர்
மழைத் திருவிழா!

வானவில்லின்
வரவேற்பு வளையம் கண்டு
வாசல் தாண்டி
வீதியில் இறங்கினேன்,

என்மேல்
வாசனைமேகம்
லேசாய்
பன்னீர் மழை தூவியது!

வானத்தில்
அங்கங்கே
அழகழகாய்
மின்னல்தோரணங்கள்,

வலையபட்டியின்
விலாசம் கேட்டு
குமுறிக்கொண்டிருந்தது
இடி மேளம்!

தவறாமல் வந்துவிட்ட
என்னைக் கண்டு
தாயை போல் வாரி
அணைத்துக் கொண்டது
சாரல் காற்று!

எப்போதும் போல்
என் பார்வைக்கு
வசப்படாத
வானம்பாடியைத்
தேடி அல்ல - இந்த முறை
என் பயணம்,

சென்ற முறை
யாருமற்ற வீதியில்
கல்லூரி விட்டுத் திரும்புகையில்
சந்தன விரல்களால்
சாரல் காற்றைத்
தொட்டு விளையாடி மேலும்
குளிரச் செய்துகொண்டிருந்த
உன்னைத் தேடியே
இந்த முறை
என் பயணம்!

என்னோடு சேர்ந்து கொண்ட
சாரல் காற்று
சொல்லித் தந்தது
உன் பெயரை...,

சந்தோசமாய்
இருவரும்
சத்தமாய் - உன்
பெயரை கூவிக்கொண்டே....

இரு, இரு
ஒருவேளை என்னைப்போல்
வானம்பாடியும்
உன்பெயரை கூவியே திரிகிறதோ
ஒவ்வொரு
மழைக்கும் முன்பும்....!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 4:07 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே