அந்திச் செவ்வானம்!!

ஆயிரம் சம்பாஷணைகள்
உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தாலும்
மெளனத்தை பேசவிட்டு விட்டு,

சாரல் வீசும் ஒரு
சாயங்கால வேளையில்
சாலையோரமாய்
சென்று கொண்டிருந்தோம்!

'விடுகதை ஒன்று கேட்கட்டுமா?' என்றபடியே,
மரங்களில் எது ஆண் மரம்
தெரியுமா என்றாய்? '
காற்றோடு விளையாடிக்கொண்டிருந்த
உன் காதோர முடியை சரிசெய்தபடி..!

நான் சொன்னேன்
'தெரியாது' என்று!

நீ சொன்னாய்,
ஆலமரம்தான் அது,
ஏனென்றால் அதுதான்
விழுதுகள் எனும்
தாடி வளர்த்திருக்கிறதே'
என்று சிரித்தபடி!

சற்றே பயந்தாற்போல்
நான் சொன்னேன்,
'இப்படி கன்னத்தில் குழிவிழ
அழகாய்
நீ சிரிப்பதை பார்த்தால்
எல்லா மரங்களுமே
ஆணாகிவிட கூடுமென்று...!'

சட்டென்று
உன் கன்னம் சிவந்து
மறைந்ததை
பொறாமையோடு
பார்த்துக்கொண்டிருந்தது
அந்தி செவ்வானம்!!!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 4:05 pm)
பார்வை : 0


மேலே