மெளன வார்த்தைகள்!
அலைகளில் பயணித்து
கடலேறி,
போட்டி போட்டுக்
கொண்டு செல்லும்
நம் மனதின் வார்த்தைகளை
பார்த்துக்கொண்டிருந்தோம்
கரைகளில் அமர்ந்தபடி!
என் வார்த்தைகள்
ஜெயிக்க வேண்டுமென்று நீயும்,
உன் வார்த்தைகள்
ஜெயிக்கவேண்டுமென்று நானும்...
போட்டியின் முடிவை
படபடப்போடு
பார்த்துக்கொண்டிருந்தாலும்
உன் ஒரு கையால்
மணல் அள்ளி
அம்மணலிலேயே
போட்டுக்கொண்டிருந்தாய்,
கடலிலிருந்து நீர் அள்ளி
மீண்டும் அக்கடலிலேயே
கொட்டிவிடும் மழை மேகம் போல!
விடை தெரிந்திருந்தும்
சிறு குழந்தை போல
சட்டென்று நீ கேட்டாய்
'மதியத்தில் மட்டும் ஏனிந்த மணல்
இப்படி சுடுகின்றது' என்று!
நான் சொன்னேன்
'உன் பாதசுவடு படாத
தங்கள் மேல்
உன் நிழல்
சுவடாவது படுகிறதே என்று
அவைகள்
சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்க
நீயோ நண்பகல் வந்தால்...
அந்த கோபத்தினால் தான் சுடுகின்றது' என்று.
சற்றே முறைத்தபடி
"உங்கள..." என்று செல்லமாய்
அடிக்க வந்தாய்!
அடுத்த நொடியே
மணல் சுட ஆரம்பித்தது.
இந்த மாலை நேரத்தில்
இப்படி மணல் சுடுவதற்கு
நிச்சயமாய் உன்மேல் உள்ள
கோபம் காரணமல்ல!!