மகனே கேள்

மகனே கேள்!

உனக்கு செண்டிமெண்ட் பிடிக்கவில்லை என்பதாலேயே நான்
நவீன தந்தை ஆகிவிட்டேன்.
சொல்லும் எல்லாவற்றையும்
உனக்கெனவே கற்றுக் கொண்டுவிட்டேன்.
கணக்கு வேதியல்
சொல்லிக் கொடுக்கும் போதும்
உன்னிடம் கடுமை காண்பித்ததில்லை.
வாத்தியாரின் கடுமையினால்
முகம் சுருங்கினால் கூட
துடித்துப் போயிருக்கிறேன்.
சில காலமாக
உன் அம்மாவிடம் கூட
அவளுக்குப் பிடித்த திருடனாக
இருக்க மறந்து போய்விட்டேன்.
அதில் சற்று அவளிற்குக் கோபம்தான்.

பத்தாம் வகுப்புவரை அம்மாப் பிள்ளையாக இருந்த நீ
இன்று உன் அம்மாவோடு ஏட்டிக்குப் போட்டி செய்கிறாய்
கை நிறைத்துப் பேசுகிறாய்
அவளிடமும் என்னிடமும்
அடுத்த வீட்டுப் பெற்றோரைத் தேடுகிறாய் .
அவர்களின் வீட்டின் இருப்பை
உன் வீட்டின் இன்மையாக்கிக் கருதி
கத்துகிறாய் , கதறுகிறாய்
சண்டை போடுகிறாய்.
இருக்கும் வாழ்க்கையின் மீது
பற்றட்டுப் போயிருக்கிறாய்.
எதிலும் உடனே சலித்துப்போகிறாய்.
எங்களிடம் பேசுவதையே
விரோதமாக்கி நிற்கிறாய்.

என் குடிகாரத் தந்தையிடம்
எனக்கிருந்த இடைவெளியில்
ஒரு புரிதல் இருக்கும்
அவர் இதயம் அழுதால்
எனக்குக் கண்ணீர் வரும்.

உனக்குத் தெரிய வாய்ப்பில்லை
சிறு வயதில் பள்ளிவேனில் இருந்து
இறங்கிவரும் உனக்காக
சமயத்திற்கு முன்னமே காத்திருப்பார்.
உன்னை உப்பு மூட்டை
சுமந்து கதை சொல்லிக் கொண்டே
வீடுவருவார்
குடிகாரத் தாத்தாவின்
பசிவயிறுமேல் படுத்திருப்பாய்.
நானோ அவளோ அழைத்தால் கூட
வரமறுப்பாய் .
அதனால்தானோ என்னவோ
வாய்க்கரிசி போடும் சமயத்திலும்
உனக்கேத் தெரியாமல்
நீ அழுதிருப்பாய் .

இதெல்லாம் உன்னிடம்
சொல்லவேண்டுமாய் நேரம் பார்க்கிறேன்
என் அருகில் உன்னை இருத்தி
நிறைய பேசவேண்டுமாய்
தோன்றுகிறது.
உன் பொறுமையின்மையோடு
என் பொறுமை போட்டிப் போட முடியாமல் தோற்று நிற்கிறது.
நீ வேகமாய் வளர்ந்து நிற்கிறாய்
என்னிடம் எதையும்
பகிர மறுக்கிறாய்.
உன் பிடித்தங்களுக்கெல்லாம்
என்னிடம் அனுமதி மட்டும்
கோருகிறாய்.
நீ எதுக் கேட்டாலும் நான் மறுக்கமாட்டேன் என
நன்கறிந்து வைத்திருக்கிறாய்.

மரணத்தைப்ப்பற்றிய பயமில்லை எனக்கு.
இப்படியேப் போனால்
உனக்கு நான் புரியாமல் இறந்துவிடுவேனோ என்றுதான் பயமாயிருக்கிறது.

ஒருநாள்
உனக்குக் கஷ்ட்டங்கள் புரிய
ஒரு உதாரணம் கூறினேன்

அப்போது நீ ஆறுமாதக் கைக் குழந்தை
எனக்கு வேலையின்மை.
நம் வீட்டின் நிலை
என் உடல் முழுவதும் பாரமாய்
ஆக்கிரமித்திருந்தது
உன்னைத் தூக்கி சுமந்து கொஞ்சும்
மனநிலைக்கூட இழந்திருக்கிறேன் அன்று .
உன் அம்மா
பாயில் படுத்து அழுதுக் கொண்டிருக்கும் உன்னிடம்
சிரித்த முகத்துடன்
விளையாட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தாள் .
அன்று முதல் இன்றுவரை
அவள் அப்படித்தான் இருக்கிறாள்.
எத்தனையோ சோதனைகளிலும்
அவள் முகம் சுளித்து
நான் பார்க்கவில்லை.
அன்றும் அவள் இப்படித்தான்
இன்றும் அவள் இப்படித்தான்.
நீ தவறு செய்தால் அன்றும் உன்னைக் கண்டித்தாள்
இன்றும் நீ செய்யும் தவறுகளுக்காய்
உன்னைக் கண்டிக்கத்தான்
செய்கிறாள்.
எதில் நீ குறைக் கண்டு நின்றாயோ ?
தெரியவில்லை.
அவளை இன்று இழக்கக் கூடி
தயாராகி நிற்கிறாய்.

எல்லாம் சொல்லிமுடித்தப் பின்பும்
ஏற்க மறுக்கிறதா ?
இல்லை புரிய மறுக்கிறதா ? உன் மனம்.
இதையெல்லாம்
என்னிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் என
செவி அடைத்துவிட்டாய்.

அன்று கைப் பிடித்து தெருவில் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்து நடந்து போகும் போது
என் அன்பிற்குள்தான் உன் உலகம்
இருப்பதாய் உணர்ந்திருந்தேன் .
நீ வளர்ந்த பின்பு
என்னோடு சேர்ந்து நடக்கும்
கணப்பொழுதெல்லாம்
நீ என்னைவிட உயரமாய் இருப்பதை எண்ணி
புளங்காகிதம் அடைந்திருக்கிறேன்.
என் தந்தைக்கு நான்
தோள் கொடுத்ததைப் போல்
என் போதாத நேரங்களில்
உன் தோள் பிடிக்கக் காத்திருக்கிறேன்.
என்றும் நீ உடன் இருப்பாய் என
தைரியமிருக்கிறேன்.

உனக்கு உருட்டிக் கொடுத்த சோற்றின்
ஒரு ஒருப்பிடி உருளையிலும் அன்புதான் இருந்தது.

எதிலும் உன்னிடம் கண்டிப்பாய்
இருக்க மறுத்துவிட்டேன்
யார் என்ன சொன்னபோதும்
என் கோபதாபங்கள் அனைத்தையும் மொத்தமாய் கைவிட்டுவிட்டேன்.
என்னை சுற்றி இருக்கும் அனைவரும்
உன் விஷயத்தில்
நான் ஏன் இப்படி இருக்கிறேன் ?
என்று கொதித்தபோதும் ஊமையாகிதான்
உறைந்து நின்றேன்.
""இதெல்லாம்
உன் உடைந்த குரலில்
என் உயிரைத் தைத்துவிட்டதால்.""

நீ
அன்று பிடித்து நடந்தது
என் விரல்களை அல்ல.
யாராலும் அறுத்தெரியமுடியாதென்னும்
எனக்கும் உனக்குமான
உறவின்
தொப்புள் கொடியை.
இன்று அதைப்பிய்த்து ஓடும் உனக்கு பக்குவமில்லால் போகட்டும்
பரவாயில்லை.
உன் இழப்பு நானாகிப் போகட்டும்.
என் ஆகிருதியின்
ஆசிர்வாதங்கள் எல்லாம்
உனக்கானவையே.

உன்னை எனக்கு எத்தனைத் தெரியும்
புரியும்
என்றுக் கேட்கிறாய்.
நெருப்பில் எரியக் காத்திருக்கும்
விட்டில் பூச்சிப் பறத்தலின்
வேகம் உனக்கு.
ஆபத்தில் சிக்கியப் பிறகு
புரிந்தென்ன ஆகப்போகிறது ?
அறிந்தென்ன ஆகப் போவது ?
""உனக்காய் ஓடிக்கொண்டிருக்கும்
காலம் சாவிக் கொடுத்த
கடிகாரம் நான்.""
உனக்குப் புரிந்த புரியாத
எல்லாத்திலிருந்தும்
காத்துக் கொள்ளவே
என் இதயமுள் வேகமாய்த் துடிக்கின்றதை
எப்போது அறிவாய் ?

எத்தனையோ
காலங்கள் கழிந்து
நான் கல்லறைக்குப் போனாலும்
ஒருநாள்
எங்கப்பா எனக்கு
எல்லாம் செய்தார் என
உன் நண்பர்களிடம் சொல்லி வருந்துவாய் என்னும்
வெறும் நம்பிக்கையுடன்

உன் அப்பா .

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (21-Apr-25, 3:34 am)
Tanglish : makanae kel
பார்வை : 30

மேலே