தோத்திரப் பாடல்கள் மஹா காளியின் புகழ் காவடிச் சிந்து

காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு --ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு -- தழல்
காலும்விழி நீலவன்ன மூல அத்து வாக்களெனும்
கால்களா றுடையதெனக் கண்டு -- மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.
மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணுமண்ணு மானசக்தி வெள்ளம் -- இந்த
விந்தையெல்லா மாங்கது செய் கள்ளம் -- பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம் -- ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம். 1

அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை -- இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை -- அவள்
ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை -- அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
இஃதெலா மவள்புரியும் மாயை -- அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை -- எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர் நித்தம்
எய்துவார்மெய்ஞ் ஞானமெனுந் தீயை -- எரித்து
எற்றுவாரிந் நானெனும் பொய்ப் பேயை. 2


ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் -- ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும் -- அவை
யன்றியோர் பொருளுமில்லை, அன்றியொன்று மில்லையிதை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் -- இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது -- எந்த
நெறியுமெய்து வர்நினைத்த போது -- அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கில்லையோர் தீது -- என்று
நேர்மைவேதம் சொல்லும் வழி யீது.

3


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:03 am)
பார்வை : 0


மேலே