தீ அணையட்டும்

ஆண்டுக்காண்டு நிகழும் மாரியம்மன் திருவிழாவைப் போல ஆண்டுக்காண்டு நடக்கும் ஜாதிக்கலவரங்களுக்கெதிராய் எத்தனையோ கவிதைகள். இந்தக் கவிதையே இறுதிக் கவிதையாய் இருக்க வேண்டுமென்று இந்திய சுதந்திரத்தைப் பிரார்த்திக்கிறோம்.



தெற்கே தெற்கே ஜாதிகள் மூட்டும்
தீயே பற்றாதே! - பழங்
கற்காலத்துப் பாம்பே! எங்கள்
காலைச் சுற்றாதே!

மண்பானைகளும் மண்பானைகளும்
மல்லுக்கு நிற்பதுவோ - இங்கே
கண்ணீர்த்துளிகளும் கண்ணீர்த்துளிகளும்
கைகள் கலப்பதுவோ?

தாழ்த்தப்பட்டவர் ஒடுக்கப்பட்டவர்
சண்டை பிடிக்கையிலே - அங்கே
வீழ்த்தப் படுவதும் வெல்லப் படுவதும்
வேறோர் இனம(ல்)லவே!

முற்நூறாண்டை முன்னுக் கிழுக்குது
முரட்டு விஞ்ஞானம் - நாமோ
முந்நூ றாண்டு பின்னே செல்வது
முழுக்க அஞ்ஞானம்

அந்நிய ரோடு சண்டை கொண்டது
ஆறோ ஏழோதான் - சொந்த
மண்ணவ ரோடு சண்டை கொண்டது
மணலினும் அதிகம்தான்

செயற்கை மனிதன் செவ்வாய்த் தரையில்
சிற்றில் ஆடுகையில் - இங்கே
இயற்கை மனிதர் ஜாதிச் சண்டையில்
இடுப்பு முறிவதுவோ?

நீண்ட நாள்முன் யாரோ விதைத்த
நெருப்பின் மிச்சத்தில் - மண்ணை
ஆண்ட பரம்பரை இன்று வரைக்கும்
அழிந்து கருகுவதோ?

புதைந்த தமிழின் சங்கம் மூன்றைப்
புதுக்க எண்ணாமல் - நம்மைப்
புதைக்கும் ஜாதிச் சங்கத்துக்கள்
புதைந்து போவீரோ?

வறுமை ஏழ்மை பேதைமைக் கெதிராய்
வாளை எடுக்காமல் - நாம்
ஒருவரை ஒருவர் எரித்து மகிழும்
உற்சவம் நடத்துவதோ?

புத்தகம் ஈந்து கல்விச் சாலை
போக்கும் சிறுவர்களைக் - கையில்
கத்திகள் தந்து ஜாதிக் களத்தில்
கருகச் செய்வீரோ?

மனிதன் என்னும் நிஜத்தை நீங்கள்
மறந்து தொலைத்துவிட்டு - ஜாதிச்
சனியன் என்னும் கற்பனைக் காகச்
சமர்கள் புரிகுவதோ?

ஆயுதங்களைக் கட்டும் கைகாள்
அணைகள் கட்டுங்கள் - அந்த
ஆயுதங்களை உருக்கி உருக்கி
ஆலைகள் எழுப்புங்கள்

சிறைகள் எடுக்கும் செலவில் நீங்கள்
சிறகுகள் வாங்குங்கள் - வீணே
தரையில் சிதறும் ரத்தம் போதும்
தானம் புரியுங்கள்

முன்னே வள்ளுவன் பின்னே பாரதி
முழங்கினர் ஊருக்கு - அட
இன்னும் நீங்கள் திருந்தா விட்டால்
இலக்கியம் ஏதுக்கு?


கவிஞர் : வைரமுத்து(26-Oct-12, 3:35 pm)
பார்வை : 0


மேலே