தமிழியக்கம் - பாட்டியற்றுவோர்

தமிழ்சைப் பாட்டியற்றுபவர்
தமிழர்களாய் இருந்தால்தான்
தமிழ்த்தென் பாங்கில்

அமைவுப்பெறும்! பார்பனனும்
தமிழறிவுக் கயலானும்
அமைக்கும் பாடல்,

அமுதொத்த தமிழின்மேல்
எட்டியையும் வேம்பினையும்
அறைத்துப் பூசித்

தமிழர்க்கே தமிழ் என்றால்
தனிக்கசப்பென் றாக்கிவிடும்
தானும் சாகும்!

மனமேஈசனின் நாமம்
வாழ்த்துவாய் எனும் வேத
நாய கன்தன்

இனிதான பாடலைப்போல்
திருடுவதற் கில்லை யெனில்
இங்கோர் பார்ப்பான்

தனதாய் ஒன்றுரைப்பான் அத்
தமிழ்ப்பாட்டில் தமிழுண்டா?
எள்ளின் மூக்கத்

தனையிருப்பின் இரவுதனை
"ரா" என்றே சாற்றியிருப்
பான் அப் பாட்டில்!

செந்தமிழில் அன்புடையார்
சிலபார்ப்பார் இருந்தாலும்
அவரை, மற்றச்

செந்தழற்பார்ப் பார்கெடுக்கப்
பார்ப்பார் இத்தமிழ்வாழப்
பாரார் அன்றோ!

அந்தமிழால் உடல்வளர்ப்பார்
ஆரியந்தான் தமதென்பார்,
ஆரியத்தில்

இந்த வரி என்ன எனில்
யாம் அறியோம் எம்பாட்டன்
அறிந்தான் என்பார்!

மறை அறியார் எனினும் அவர்
மறையவராம் என்றுரைப்பார்!
இலக்கணத்தின்

துறையறியார் எனினும் அவர்
தூய தமிழ் எழுத்தாளர்
என்று சொல்வார்!

குறையுடையார் எனினும் அவர்
குதித்திடுவார் யாம் மேலோர்
கூட்டம் என்றே!

அறையுமிவை பெருந்தமிழர்
ஆழ்ந்தநெடுந் தூக்கத்தின்
பயனே அன்றோ!

இயற்கை எழில் என்னென்ன?
இனியதமிழ் நாட்டின்சிர்
என்ன? மற்றும்

செயற்கரிய நந்தமிழர்
என்னென்ன செய்தார்கள்?
செந்தமிழ்க்காம்

முயற்சி எவை நாட்டிற்கு
முடிப்ப தென்ன? இவையனைத்தும்
தனித்த மைந்த

வியத்தகுசெந் தமிழாலே
வெல்லத்துத் தென்பாங்கில்
பாடல் வேண்டும்.


கவிஞர் : பாரதிதாசன்(19-Mar-11, 6:48 pm)
பார்வை : 114


மேலே