பெண் குழந்தை தாலாட்டு

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ

சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!

வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!

வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!

மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

வேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!

தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!

வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு!


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 4:28 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே