தமிழ் கவிஞர்கள்
>>
பாரதிதாசன்
>>
கைம்பெண் நிலை
கைம்பெண் நிலை
கண்போற் காத்தேனே - என்னருமைப்-
பெண்ணை நான்தானே (கண்)
மண்ணாய்ப் போன மாப் பிள்ளை
வந்ததால் நொந்தாள் கிள்ளை
மணமக னானவன் – பிணமக னாயினன்
குணவதி வாழ்க்கை எவ் - வணமினி ஆவது? (கண்)
செம்பொற் சிலை, இக் காலே
கைம் பெண்ணாய்ப் போன தாலே
திலகமோ குழலில் - மலர்களோ அணியின்
உலகமே வசைகள் - பலவுமே புகலும் (கண்)
பொன்னுடை பூஷ ணங்கள்
போக்கினாளே என் திங்கள்!
புகினும் ஓர் அகம் சகுனம் தீ தென
முகமும் கூசுவார் - மகளை ஏசுவார்! (கண்)
தரையிற் படுத்தல் வேண்டும்
சாதம் குறைத்தல் வேண்டும்
தாலி யுற்றவள் - மே லழுத்திடும்
வேலின் அக்ரமம் - ஞாலம் ஒப்புமோ? (கண்)
வருந்தாமற் கைம்பெண் முகம்
திருந்துமோ இச் சமுகம்
மறுமணம் புரிவது – சிறுமைஎன் றறைவது
குறுகிய மதியென - அறிஞர்கள் மொழிகுவர் (கண்)