சரசுவதி அந்தாதி - கலித்துறை பாகம் 5

அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு
முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்
விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. 21

வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்
கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்
சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. 22

சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்
சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து
சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா
மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. 23

அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப்
படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. 24

தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து
விழுவார் அருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்
தழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. 25


கவிஞர் : கம்பர் (11-Apr-11, 11:07 am)
பார்வை : 59


மேலே