சரசுவதி அந்தாதி - கலித்துறை பாகம் 6

வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. 26

பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ
மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்
தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்
கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. 27

இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே
துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. 28

கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்
புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்
பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. 29

பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்
திருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. 30


கவிஞர் : கம்பர் (11-Apr-11, 11:12 am)
பார்வை : 67


பிரபல கவிஞர்கள்

மேலே