நம்மை அது தப்பாதோ?

1.

ஓர் ஏழையின் சிரிப்பில்
அவனது அப்பாவைப் பார்த்தேன்
அவரும் ஓர் ஏழைதான்
அவரது சிரிப்பில்
அவரது மனைவியைப் பார்த்தேன்
அவளும் ஓர் ஏழைதான்.

அம்மா அப்பா பிள்ளை
மூன்று பேரும்
தனித்தனி யாக
நாடு நாடாகப்
பாசி மணிகளும் கருமணிகளும்
ஊசிகளும் விற்றார்கள்.

மான் கொம்பும்
புலிப் பல்லும் விற்றார்கள்

எருமைக் கொம்பில் செய்த
சின்னப் பல் பெரிய பல்
சீப்புகளும் விற்றார்கள்

நிறைய சம்பாதித்து
நாடு திரும்பினாள் அம்மா
அவளைப் பார்த்து சிரித்தார் அப்பா
அவரைப் பலநாள் கழித்துப் பார்த்ததால்
வெட்கப்பட்டாள் அம்மா
ஆனால் சிரித்தாள்.

தேசம் முழுதும் திரிந்தவள்தான். ஆனால்
அப்பா அவளை சந்தேகிக்கவில்லை.
தேசம் முழுதும் திரிந்தவர்தான். ஆனால்
அம்மா அவரை சந்தேகிக்கவில்லை.
பழைய மகாபலிபுரம் சாலையில்
வருகிற போகிற கார்கள் நிற்கும்போது
பாசிமணி விற்கிறாள் ஒரு பெண்.
கார் துடைக்கும் மஞ்சள் துணியைக் காட்டி
வாங்கிக்கொள்ள வேண்டுகிறாள்.

காரில் இருப்பவன் சிரித்துச் சொல்கிறான்
‘அழகாய் இருக்கிறாய் நீ’ என்று.
முகத்தைத் திருப்பிக்கொண்டு
போகிறாள் அந்தப் பெண்.

யாரைப் பார்த்தும்
அவன் சிரிக்கவில்லை.
அப்படி ஒருவேளை சிரித்திருந்தால்
அந்தச் சிரிப்பில்
தெரியப் போவது
யாராக இருக்கும் சொல்லுங்கள்.

2.

என்னிடம் நீ சொன்ன ஒவ்வொரு
கெட்ட வார்த்தைக்கும் உனக்குத்
தண்டனை ஒன்று காத்திருக்கிறது.

தொலைபேசியில் சொன்ன வார்த்தைக்கு
ஒருவிதமாகவும் எனது
பாதையை மறந்து
நேரில் சொன்ன வார்த்தைக்கு
ஒருவிதமாகவும்
தண்டனை ஒன்று காத்திருக்கிறது

ஒரு பொருளை என் மீது
வீசி எறிந்தாயே அதற்கும்
கடக்கும் போதில் இடித்தாயே அதற்கும்
தண்டனை ஒன்று காத்திருக்கிறது.

எல்லோருக்கும் தெரிய வேண்டாம் என்று
இப்போது நிறுத்திக்கொள்கிறேன்.
நெடிது வளர்ந்த ஒரு மரத்தின் பின்னால்
கையிலே விளைந்த வில்லும் கம்புமாய்
கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது ஒரு தெய்வம்
நீ உனது இரண்டு சக்கர
வண்டியின் பெடலை
உதைக்கிறாய், உதைக்கிறாய், உதைக்கிறாய்.

3.

பைகிராப்ட்ஸ் சாலையில் இன்று
வியாபாரம் மந்தம்

தேநீர்க் கடையிலும் கூட்டம் மந்தம்.

கோடம்பாக்கத்தின், ஜீன்ஸ் பழகாத
உதவி இயக்குநர் ஒருவர்
மேசை மேல் காசை வைக்கிறார்
தேநீர்க் கடை முதலாளியின்
தலைக்கு மேல் இருக்கும்
தும்பிக்கையானைக் கும்பிட்டார்
பார்த்தசாரதி கோயில் பக்கம்
நகர்கிறார் – ஒரு வாய்ப்பு பலிப்பதற்காக.

நடைபாதைத் துணிக் கடையில்
முகத்திரையை முதுகுப் பக்கம் தள்ளிக்கொண்ட
முஸ்லீம் பெண்ணொருத்தி
பேரத்துக் கிடையில் சிரிக்கிறாள்.

பழைய புத்தகத் தடையில்
படுத்துக் கிடக்கும் புத்தகக் கூட்டத்தில்
ரூபன் தாரியோ கவிதைத் தொகுப்பு
கிடைத்த சந்தோஷத்தில்
அம்பத்தூர்ப் பேருந்தின் படியேறி
கையசைத்தார் நண்பர் கவிஞர்

பாதையோரம் நின்றிருந்த நான்
உனக்கு எழுதப் போகும் கடிதத்தின்
உள்ளடக்கம் பற்றி யோசிக்கிறேன்

நின்றிருக்கும் யாரையாவது ஒருவரைத்
தொட்டுவிட்டு ஓடும்
அந்தப் பைத்தியக்காரன்
இன்றைக்குத் தொட்டுப் போனது என்னை.

4.

சொன்னதைத் தாமதமாய்த்
திருப்பிச் சொல்கிறது
உனது குன்றம்
என்ற பாடலை
வீணையில் இசைத்தாள் ஞானாட்சரி
அப்புறம் நான்
நெடுநேரம்
சிரித்துக்கொண்டிருந்தேன்.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:41 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே