விலகிப் போகும் வாழ்க்கை

இன்றும்
ஒருவரை
என்னை விட்டு
வழியனுப்ப நேர்கிறது
நேற்றும்
அதற்கு முன்பும் கூட
நீங்கள்
நினைப்பது போல
இது வாசல் வரை சென்று
வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல

ஒவ்வொரு வழியனுப்புதலும்
வயதை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்வை வழியனுப்புதல் போல
இதயத்தைக் கனக்க வைக்கிறது



இப்படியே
நம் நண்பர்களை
நினைவூகளை
சிந்தனைகளை
தினமும்
ஏதேனும் ஒன்றை
வழியனுப்பிக்கொண்டிருப்பதை
நீங்கள் யாரும்
ஆழமாய் அறிவதில்லை

அதனாலேயே
உங்களால்
சிரித்த முகத்துடன் இருக்கவூம்
பத்திரிகை படிக்கவும் முடிகிறது

நானோ
பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்


இந்த வாசலில்
மிகவூம் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறேன்

ஆனால் எப்போதும்
யாராலுமே விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச்செண்டுகாளய்
அனுப்பப்படுகின்றன.


கவிஞர் : சல்மா(2-May-14, 2:10 pm)
பார்வை : 0


மேலே