இறுதியாக ஒரு முறை - தனிமையின் ஆயிரம் இறக்கைகள்

இதயக்கமலங்கள் மலரும் மாலைப்பொழுது


ஓர் உறவின் முறிவைப் போல்
சடாரென்று விழுந்து நொறுங்கிப் போகின்றன
சூரியனின் கைகள் மேற்கே


தெருவெங்கும் கூச்சமிழந்த பெண்களின்
சிரிப்பொலிகள்
வாணவேடிக்கைகளாய் வெடித்து ஓய்கின்றன


நிசப்தம் ஜன்னலையும் கதவுகளையும்
சாத்தும்போது
அவள் அன்று ஐந்தாம் முறையாகக் களைப்புற்றிருந்தாள்


‘சுவர்களையெல்லாம் உடைத்துக் கொண்டு வெளியேற வேண்டும்.
ஆடைகள் எதுவும் தடுக்காது நகரத்தின் மைய வீதி வழியே
ஓடிக் கொண்டே இருக்கவேண்டும்
பருவம் காலம் இடம் மனிதர் பேதமின்றி
ஒரு பழைய ஞாபகத்தின் தொங்குபாலமும்
வேகத்தைக் குறைக்காது…
ஒரு பாடலின் கடைசி வார்த்தை மலைமடிப்புகளுக்கிடையே
ஒலித்துக் கொண்டேயிருப்பது போல்’
நிலத்திலிருந்து உடலை உயர்த்தும்போது
உடலெங்கும் பாசி படர்ந்து தரையோடு அழுத்தியது.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 4:52 pm)
பார்வை : 0


மேலே