ஆண் உடல் ஒரு பிரமை - தனிமையின் ஆயிரம் இறக்கைகள்

உனது கண்களின் போதை

அகலப்பாய்ந்து

என்னுள் உதிரத்தின் பேரருவி

என்புக்குள் சீறிப்பாய

தீண்ட ருசிக்கும்

எனது பார்வைகள்

உன்னில் பதியனிடும்

வரலாற்றின் தண்டுகள்

உனது வார்த்தைகள்

என்னுள் நிரம்பி

மூலத்தில் மெளனமாய்ச்

சுருள்கின்றன

நீ மெளனத்தை

இரு துண்டுகளாகக் கிழித்து

என் மீதெல்லாம்

மழையடிக்கிறாய்

பின் இறுகிய தரையில்

ஒன்றிரண்டாய்

அதன் கனத்த துளிகள் வீழும் சப்தம்

நீண்ட நேரம்...

பருவத்தின் பின் பருவமாய்க்

காலம் இழுத்துச் செல்லும்போது

விடுதலைக்கான கதறல்

அழைத்து வந்தது என்னை

உனது வார்த்தைகள்

என்னுள் நிரம்பி

மூலத்தில் மெளனமாய்ச்

சுருள்கின்றன.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 4:55 pm)
பார்வை : 0


மேலே