காமம் செப்பாது முழுதும்

பாசம் நேசம் பரிவு அன்பு நட்பு
பிரியம் பிணைப்பு கனிவு கரிசனம்
யாவற்றினுள்ளும் சுருண்டு கிடக்கும்
காமம் என்னும் ராஜ வெம்பாலை
நலிந்து வசமாய் வாய்த்த வட்டம்
பிரிய ஊக்கம் அற்று
படம் விரித்து கூசி நின்றது

காதல் எனும் சொல்லுரைக்க
பிளவு பட்ட நா நீட்டித் துழாவும்
சரசரவெனச் சுருள் பிரியும்
இழுத்து வாங்கிய காற்றில் பை நிரப்பிப்
படம் எடுக்கும்

காமத்துப் பாம்பில் வாலிபமென்ன வயசென்ன
ஆணென்ன பெண்ணென்ன
அழகென்ன அதிரூபமென்பதென்ன
பரமசிவன் கழுத்தில் படமெடுத்து ஆடுவது
உடலா மனமா?

காமம் அணங்கும் பிணியும் அன்றென்றான்
குறுந்தொகைப் புலவன் மிளைப் பெருங்கந்தன்

காமம் கையறு நிலையல்ல கை மீறிய நிலை

பாரதியைத் திரும்பவும் படியுங்கள்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்ப முதற் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
காதலினால் சாகாமல் இருக்கக் கூடும்
கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம்

காதல் பட்டினத்தடிகளின் சீடர் பத்ரகிரி எனில்
காமம் அவருடன் உறையும் நாய்
பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடப்பதும்
காமக் கடும்புனல் துழா அய்க் கரை சேர்வதும்
ஒரு கணக்கில் ஒன்றுதான்
சிற்றின்பம் என்பது பேரின்பம்
பேரின்பம் என்பதோர் சிற்றின்பம்

தன்பாற் காமம் எதிர்பாற் காமம்
கூடா ஒழுக்கம் கைக்கிளை பெருந்திணை
என இறுக்கிக் கட்டி இற்செறிந்தாலும்
கண்ணி தெறித்துக் கதிக்கப் பாய்வது காதல் வேகம்
காதலும் காமமும் உயிரும் விடுக்கும்
உயிரும் கொடுக்கும்

ஆதலினால் மானுடரே காதல் செய்வீர்.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:54 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே