வாழ்வின் கவிதை

நீர்க்கரையின் கோரையிடை பாம்பின் கண்கள்.
புல்பூத்த தட்டானில் மயங்கும் தவளை.
துருதுருத்து மோந்தபடி கீரிப்பிள்ளை.
பசுமை இனிக்க மான் கிழை
வரும் தடத்தில் விரிகிறது மனிதன் கண்ணி.
அச்சத்தில் சாகாதவை வாழ்கிறது
இக்கணம்.
என்றும்போல் மருதமரம் செழிக்க ஊட்டியும்
வேர் அறுத்தும் நகர்கிறது பாலி ஆறு.
டைட்டானிக் கனவு மனிதா
உன் விஞ்ஞான வரைபடத்தில்
ஏது மிதக்கும் பனிப்பாறை.
எனினும் உன்னால் இயலுமே
முழ்கையிலும் வயலின் மீட்டி
சாவையும் வாழ்தல்.
ஞான் அறியும்
நஞ்சு பருக விதித்த பின்னும்
வாழ்ந்த ஒரு கிரேக்கத்து மனிதன் காதை.
இலக்கமில்லா வாகனம் ஊரும்
எதிரிகளின் துப்பாக்கி சுட்டும் போதும்
நண்பரது கொலைக்கரத்தால் விலங்கு பூண்டு
நாள் நேரம் காத்திருந்த வேளையிலும்
வாழும் ஆசை புதுவெள்ளமாய் பெருக
ஜீவநதியாய் இருந்தேன் என்பதன்றி
பெருங்கவிதை
என் வாழ்வில் வேறு ஏது.
கையில் கறையாக
பெண்கள் சிலரது கண்ணீர் மட்டுமே
மனிதம் இழிந்து ஆண்மையாவதில்
பெருமைப்பட்ட
என் கவிதை சாயம்போன
அந்த நாட்களை வெறுக்கிறேன்.
ஆணை/பெண்ணை தாண்டி
மனிதம் அடைதலே விடுதலை.
கைகொடுக்கிற தோழி/தோழரால்
மீட்கப்படுகிறதே பாக்கியம்.
மோசமான கவிதைகள் எழுதியுள்ளேன்
ஆனால் எப்போதும் வாழ்ந்தேன்
நல்ல கவிதையாய்.
போர்க்களம் என்மீது இறங்கியபோதும்
சிங்களத்து தோழரை தோழியரை
முஸ்லிம் சகோதரரை சகோதரியைக் கேளுங்கள்.
எப்பொழுதும் மனிதனாகவே முயன்றேன்
அதுவே நான் எழுதிய நல்ல கவிதை.
தலை பணியாது
வாழும் ஆசையை இறுகப் பற்றுதலே
எனது கவிதை.


கவிஞர் : வ. ஐ. ச. ஜெயபாலன்(3-May-14, 3:56 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே