நெடும் போர்
கொட்டு செங் குருதிக் களத்தினி லாங்கே
கொதித்தெழும் மறவர்தம்மிடையே
கட்டுடல் வீரன் ஒரு தமிழ் நெஞ்சன்
கடலென அதிர்ந்தொலி செய்வான்
தமிழர் பொன்னாட்டைத் தாயக மண்ணைத்
தரமறுக் கின்றவ னெவனோ...?
இமை நொடிப் போதி லெழுந்திரு தமிழா?
இன்னுயிர் நமக்கொரு பொருளோ?
ஓடுக தானை! ஓடுக பகைவர்
உலவிடும் திசைவழி யெல்லாம்
தேடுக தமிழர் தேசத்தின் மானம்...
தெய்வத்தில் ஆணையிட் டெழடா!
பைந்தமிழ் மொழியை எவன் பழித்தாலும்
பழித்தவன் தலை கொண்டு வாடா?
ஐந்து துண்டாக்கி அடுப்பினில் வைப்போம்!
அது நமக் குணவாகும் போடா!
கருவினில் அன்னை வளர்த்ததும் இந்தக்
கைகளைத் தந்ததும் எல்லாம்
செருவினில் வெற்றிக் கொடியுடன் நின்று
சிரிப்பதற் கன்றோடா தமிழா!
ஆழிபோல் ஆழி அலைபோல் முழங்கி
ஆடடா.... போர்க்களமாடு!
நாழிகை யொன்றில் நாடாள வேண்டும்
நாமென்று சிங்கம் போலார்த்தான்!
சங்கொன்று களத்தில் முழங்கிற்று! வீரர்
தானையும் முழங்கிற்று கண்டீர்!
பொங்குபோர்க் களத்தில் மாற்றாரும் போந்தார்!
போரென்று கொட்டிற்று முரசம்!
அதிர்ந்தன திசைகள்! அசைந்தன மலைகள்!
அழிந்தன காடுக ளெல்லாம்!
உதிர்ந்தன கரங்கள்! உடைந்தன தலைகள்!
உயர்ந்தன பிணமலைக் குவியல்!