கடலே!

ஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை
ஓலம் இடுமோர் உப்புக் கடலே!
இந்நாள் இடிநிகர் அலைக்குரல் எழுப்பி
என்னதான் நீ இரைந்து நின்றாலும்
கோடிக் கரங்கள் ஒரு நாள் உன்னை
மூடித் தமிழ்மண் போடுவதுண்மை!
அந்நாள் உனது சாநாள் ஆகும்!
நாங்களெல்லாம் கரத்தே பறைகள்
தாங்கி நின்று தாளம் கொட்டுவோம்!
உள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்
கள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்
ஈழநாட்டில் எலும்பாய் உருக
காளையைத் தமிழ்நாட்டுக் கனுப்பினாய்!
அலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்
குழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்!
அண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்
தம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்!
கடலே! உன்னை இனியும் தமிழர்
விடுவார் என்று கருதுதல் வேண்டா!
நின்றன் சாநாள் நெருங்கி விட்டது!
வெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்
சிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து
மண்ணிடும் நாள்வரை ஓயோம்...
அந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே!


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 6:40 pm)
பார்வை : 55


மேலே