பொழுது விடியப் புதுவையிலோர் வீட்டில்
விழிமலர்ந்த பாரதியார் காலை வினைமுடித்து
மாடிக்குப் போவார் கடிதங்கள் வந்திருக்கும்
வாடிக்கை யாகவரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்
சென்னைத் தினசரியின் சேதி சிலபார்ப்பார் (05)
முன்னாள் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய்ப் படிந்ததுண்டா இல்லையா என்று
வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை

அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்!
நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்பஒலி (10)
கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளப்புகின்ற
துண்டு துணுக்குரைகள்! வீரச்சுடர்க் கதைகள்!
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
பன்னத் தகுவது்ண்டோ நாங்கள்பெறும் பாக்கியத்தை?

வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம் (15)
போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்
தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார் (20)


கவிஞர் : பாரதிதாசன்(14-Jan-11, 1:44 pm)
பார்வை : 738


மேலே