மயில்
அழகிய மயிலே! அழகிய மயிலே
அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்
கருங்குயி லிருந்து விருந்து செய்யக்,
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்,
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய் அழகிய மயிலே!
உனதுதோ கைபுனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!
உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!
ஆடு கின்றாய்; அலகின் நுனியில்
வைத்தஉன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!
சாயல்உன் தனிச்சொத்து! ஸபாஷ்! கரகோஷம்!
ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல், ஆடல், உள்உயிர்,
இவைகள் என்னை எடுத்துப் போயின!
இப்போது, 'என நினைவு' என்னும் உலகில்
மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்;
நீயும் பெண்களும் 'நிகர்' என்கின்றார்!
நிசம்அது! நிசம்! நிசம்! - நிசமே யாயினும்
பிறர்பழித் தூற்றும் பெண்கள்இப் பெண்கள்!
அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்!
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்பதற்கே
இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ,
கறையொன் றில்லாக் கலாப மயிலே,
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!
இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்;
மனதிற் போட்டுவை; மகளிர் கூட்டம்
என்னை ஏசும் என்பதற் காக!
புவிக்கொன் றுரைப்பேன்; புருஷர் கூட்டம்,
பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள்
சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
