தமிழனுக்கு வீழ்ச்சியில்லை

தமிழனுக்கு வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்தி
தாழ்வதில்லை! தமிழ்நாடு, தமிழ் மக்கள்
தமிழ்என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்ததில்லை!
தமிழர்க்குத் தொண்டுசெய்யும் தமிழ னுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்!
தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ?

தமிழகத்தில் மலைபோன்ற செல்வத் தாரும்,
தம்ஆணை பிறர்ஏற்க வாழு வாரும்,
தமிழர்க்கோ தமிழுக்கோ இடையூ றொன்று
தாம்செய்து வாழ்ந்தநாள் மலையே றிற்றே!
உமிழ்ந்தசிறு பருக்கையினால் உயிர்வாழ் வாரும்
உரமிழந்து சாக்காட்டை நண்ணு வாரும்!
தமிழ்என்று தமிழரென்று சிறிது தொண்டு
தாம்புரிவார் அவர்பெருமை அரசர்க் கில்லை!

ஒருதமிழன் தமிழர்க்கே உயிர்வாழ் கின்றான்;
உயிர்வாழ்வோன் தமிழர்க்கே தனைஈ கின்றான்;
அரியபெருஞ் செயலையெலாம் தமிழ்நாட் டன்பின்
ஆழத்தில் காணுகின் றான்! தமிழன், இந்நாள்.
பெரிதான திட்டத்தைத் தொடங்கி விட்டான்;
'பிறந்துளார் தமிழறிஞர் ஆதல் வேண்டும்;
வருந்தமிழர் வையத்தை ஆளவேண்டும்'
வாழ்கதமிழ்! இவ்வையம் வாழ்க நன்றே!

அந்நாளின் இலக்கியத்தை ஆய்தல் ஒன்றே
அரும்புலமை எனும்மடமை அகன்ற திங்கே!
இந்நாளிற் பழந்தமிழிற் புதுமை ஏற்றி
எழுத்தெழுத்துக் கினிப்பேற்றிக் கவிதை தோறும்
தென்நாட்டின் தேவைக்குச் சுடரை யேற்றிக்
காவியத்தில் சிறப்பேற்றி, இந்த நாடு
பொன்னான கலைப்பேழை என்று சொல்லும்
புகழேற்றி வருகின்றார் - அறிஞர் வாழ்க!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 4:40 pm)
பார்வை : 21


மேலே