இசைத் தமிழ்

மேசை விளக்கேற்றி - நாற்காலி
மீதில் அமர்ந்தேநான்;

ஆசைத் தமிழ்படித்தேன் - என்னருமை
அம்மா அருகில்வந்தார்

மீசைத் தமிழ்மன்னர் - தம்பகையை
வென்ற வரலாற்றை

ஓசை யுடன்படித்தேன் - அன்னைமகிழ்
வுற்றதை என்ன சொல்வேன்!

செந்தமிழ் நாட்டினிலே - வாழ்கின்ற
சேயிழை யார்எவரும்

வந்த விருந்தோம்பும் - வழக்கத்தை
வாய்விட்டுச் சொல்லுகையில்

அந்தத்தமிழ் அன்னையின் - முகத்தினில்
அன்பு பெருகியதை

எந்த வகைஉரைப்பேன்! - கேட்டபின்பும்
இன்னும்சொல் என்றுரைத்தார்!

கிட்ட நெருங்கிஎனைப் - பிள்ளாய் என்று
கெஞ்சி நறுந்தேனைச்

சொட்டு வதைப்போலே - வாய்திறந்து சொல்லொரு பாடல்என்றார்

கட்டிக் கரும்பான - இசைத்தமிழ்
காதினிற் கேட்டவுடன்

எட்டு வகைச்செல்வமும் - தாம்பெற்றார்
என்னைச் சுமத்துபெற்றார்!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 4:41 pm)
பார்வை : 30


மேலே