மிச்சம்

என் சொற்களில் தேடாதீர்கள்
போதை தரும் எதையும்

பாதி எரிந்த எலும்பின் சாம்பலும்
செத்துத் தொலைத்த முன்னோர் ஆவியும் அலையும் அவற்றில்

விரல்களின் ரத்தக்கசிவு
வரிகளில் அடிக்கும் கவுச்சியில் தெரியும்

ஒரு நாளும் பூவின் மணம் வீசாத
என் வீட்டின் சேற்றுச் சகதியும்
உழைத்துக் களைத்துக் குடித்து வந்த
முனிரத்தினம் சித்தப்பாவின் வசவுகளும்
வாய்த்திருக்கும் என் சொற்கூட்டங்களுக்கு

பேரோலங்களில் கரைந்த எம்
இசையோவியங்கள் தேடக்கிடைக்காதவையே
கொடு நெருப்பில் தூர்ந்து போனது
எங்கள் விளக்கின் ஒலி

எம் முன்னோர்களுக்குக் குடிக்க
கொடுக்கப்பட்ட சாணிப்பாலைத்தான்
கக்கிக் கொண்டிருக்கிறேன்
கவிதையென


கவிஞர் : யாழன் ஆதி(2-Nov-11, 4:58 pm)
பார்வை : 61


பிரபல கவிஞர்கள்

மேலே