மரணசுகம் !

எப்போதும் போல்
அதிகாலை விடியல்
அகலமாய் அழகோடு - எனக்கு
அகாலமாய் - மற்றோர்
அழும் காலமாய் !

உறவுகளின்
செய்திகேட்ட காதுகள்
சினந்து போயின !
கடவுளிடம் கோபம் கொண்டு
சிவந்து போயின !

எனது இரண்டாம்
பதிப்புகளான - என்
நட்புகளுக்கு - நா
வரண்டது - அழுகைகூட
வர மாட்டேன் என்றது !
நம்ப முடியாமல்
வெம்பிக் கிடந்தனர் !

பாசமிகுதியால் - நான்
நட்டுவைத்த - மல்லிகை
காற்றை கைப்பற்றி - என்
மேல் விழுந்தது - பாசம்
புரியாமல் - அருகில்
இருந்த அம்மா - ஏனோ
கசக்கி எறிந்தாள் !

வாழ்வில் - நான்
வென்றதை கண்கூடாக
கண்டேன் - ஆம்
எத்தனை மாலைகள் - என்
கழுத்து பற்றி கிடந்தன...
ஏனோ...அழுத கண்களோடு !

கடவுள் செய்த
தவறுக்கு - அடி
வாங்கிக் கொண்டிருந்தது
மரித்த மாட்டின் தோல்கள் !
அதுவும் வைக்கோல்
வயிறடியில் எரிந்துகொண்டு !

என் கைக்கடிகாரத்தின்
இதயத்துடிப்பு - விண்ணைமுட்ட
வேகமாக ஓடியது -ஓர் முறையேனும்
என் முகம் காணும் ஏக்கத்தில் !
என் கரம் தழுவ - இரு
கை கூப்பி காத்திருந்தது !

என் செருப்பு - நடந்தவற்றை
நம்ப முடியாமல் - நகர
முடியாமல் வாசலில் நின்று
கதறியது - உள்ளே செல்ல
வழியிருந்தும், வழியில்லா
நிலையெண்ணி - கடந்த
நிகழ்வெண்ணி !

என் இரண்டாம் வகுப்புக்
காதலி - மல்லிகைப்பூ
சூடினால் - மேலுமொருத்தி
வைத்த குங்குமம்
வியர்வை தீண்டி
கரைந்தது - இவர்களுக்கு
நடந்ததை யார் சொல்வது ? - நான்
கிடந்ததை யார் சொல்வது ?

எனை வரவேற்க
தயாராகிக் கொண்டிருந்த
இடமெங்கும் - பூமித்தாய்
கருத்துக் கிடந்தாள் !
நிறைய மரங்கள்
வெட்டுப்பட்டு செத்துகிடந்தன
என்னுடலேறி உடனேறி எரிய !

என்னை தூக்கி வளர்த்த
நான்கு பேர் - மீண்டும்
தூக்கினார்கள் - அலுங்காமல்
குலுங்காமல் - நிறைவான
நித்திரையோடு, யாத்திரை !

துக்கம் தாளாமல்
வெடித்துச் சிதறிய
பூமாலைகள் - ஏனோ
கீழே விழுந்து - மிதிபட்டு
செத்தன - நான் நடக்காமல்
கடக்கும் தெருக்களில் !

அதுவரை - நான்
அசிங்கமென்று நினைத்து
மூக்கு மூடிய - பசுஞ்சாணம்
நான் தீக்குடிக்க இருப்பதை
காணாமல் கண் மூடியது !
ஊசிக்கு அஞ்சும்போது - என் கண்
மூடும் அம்மா போல் !

கண்மூடிய என்னை
சாணமும் வைக்கோலும்
மூடிய பின்னும் - வெளிச்சம்
தெரிந்தது - யாரோ ஒரு
கம்போடு கொளுத்தினர் !
கடவுளிடம் கடுப்போடு !

எந்த நொடியிலும்
எழுந்து வந்து
இடைதொடுவேன் - என
காத்திருக்கும் - என்
பேனாவுக்காகவது - எழுந்து
வரவேண்டும் போலிருக்குது !

என் இறப்பில்
கலங்கிய கண்களுக்கும்
மகிழ்ந்த மனங்களுக்கும்
இடப்பட்ட தகவுதான்
என் வாழ்வின் வெற்றியென
கணக்கிட்டு கொண்டிருந்தேன்,
நான் எரிவதை - கண்டு வெளிறிய
எருக்கஞ்செடிக்கு இடைநின்று !

விடியற்காலை...
எரிந்து முடிந்தபின்
எழுந்து போனேன்
வந்த வழியே - வரவில்லை
எங்குதேடிணும் வழிகள்...!
வாழ்வில் முதன் முறையாக
மரணம் கண்டேன் !
விழிகளில் கண்ணீர் - எனக்காக
அழும் கண்களை - துடைக்க
முடியாத துக்கத்தில் !

நிரந்தரத் தூக்கம்
நிம்மதியென நினைத்தேன் !
அல்ல...பேரிரைச்சல்
பிடிக்கவில்லை - யாரேனும்
திரும்பி வர வழி சொல்லுங்களேன் !


( அகனாரே, 12 வரிகளுக்குள் முடிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்...! இக்கவிதைக்கான கரு கொடுத்த, செல்வி. புலமி அம்பிகா அவர்களின் "நானும் உயிருள்ள நாளைய பிணமே" கவிதையின் கடைசி பத்தியின் இரண்டாவது வரிக்கு என் நன்றிகள்...!)

எழுதியவர் : வினோதன் (7-Jan-13, 7:10 pm)
பார்வை : 239

மேலே