உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே.(பொங்கல் கவிதை போட்டி)

வருடம் தவறாமல் தவறும் மழை.
ஒரு நாள்கூட வரத் தவறாத கடன்காரன்.
தினமும் பாரபட்சமின்றி வரும் பசி.
மேகம் கிழிந்து கொட்டாததால்
வெடித்துப் பிளந்து ஒட்டாத நிலம்,
இவை தான் உழவனுக்கு வகுத்ததோ??
உலகுக்கே உணவளிப்பவன் உழவன்.
நிதர்சனத்தில், உழவனுக்காக ஏர்உழுத
எருதுகளும் கூட பட்டினியில்.
பயிறு காய வயிறும் காய
ஏனோ திணிக்கப்பட்ட உண்ணாநோன்புடன்
ஒரு வாழ்க்கை.
மண்புழுவும் கைவிட்ட வறண்ட
நிலத்தை நம்பி புழுவாய்,
பாசனமும் இன்றி பாசி படர்ந்த ஒரு வாழ்க்கை.
வெந்தபுண்ணில் வேலாய் வேதியல்உரம்,
விவசாய மரபு அழித்த மரபினக்கலப்பு,
வறுமைத் தீயில் பஞ்சாய் பொசுங்கி
மரணத்தின் விளிம்பில் ஒரு வாழ்க்கை.
நரம்பறுத்து சாக இல்லை உடலில் குருதி,
முழ்கிச் சாக நீர் எங்கே ஆறு, குளத்தில்,
சொச்ச விலை நஞ்சுக்கே வழியில்லை,
அதனால், தன் மண்கறை வேட்டியிலே சுருக்கிட்ட
ஒரு வாழ்க்கை.