உழவின்றி உலகில்லை (பொங்கல் கவிதை போட்டி)

உழவில்லை உழவில்லை
உழவனிங்கே உழுவதற்கே நிலமில்லை
நிலம் காணி இருந்தாலும்
நட்டு வைத்த நாற்றுக்கும் நாதியில்லை
நிலமங்கை அழுதிடவும் கண் நீரில்லை
நெற்கதிர் நாணி குனியும் நிலையில்லை

பருவகால மாற்றமிங்கே
பக்குவமாய் நிலைத்து நல்ல
பார் இதனை காத்திடவே
பயிர் அதனை காத்திட்டால்
பசுமைக்கோ பஞ்சமில்லை
பசி பட்டினிக்கிங்கே தஞ்சமில்லை

உழவின்றி உலகில்லை என
உரைத்து மட்டும் முடித்து விட்டு
உயர்ந்த மாடி மணை உயர்த்தி
உரத்த லாபம் பார்ப்பதற்கே
உழும் நிலத்தின் உயிர் குடித்தால்
உணவில்லை உலகில்லை

பொங்கலிலே பொங்குமந்த பச்சரிசி
பெற்ற பிள்ளை போல் உழவனவன்
பாடுபட்டு நொந்துசெத்து ஈன்ற  சொத்து
பதித்திடுவோம் மனதினிலே பாடமிதை
பொங்குமின்பம் உழவாலே
என்றென்றும் உலகினிலே.....!!

எழுதியவர் : கன்னியம்மாள் (10-Jan-13, 1:19 am)
சேர்த்தது : kanniammal
பார்வை : 133

மேலே