திடீர் அமைதி
திடீர் அமைதி
தியேட்டர் உள்ளிருந்து படம் பார்த்த ஒரு கூட்டம் வாசல் வழியாக வந்து கொண்டிருந்தது. தகவல் தொடர்பு ஊடகங்களின் நிருபர்கள் வெளியே மைக்கை வைத்தபடி நின்று கொண்டிருந்ததை பார்த்ததும் சட்டென தங்களை சரிப்படுத்தி கொண்டு அவர்கள் வைத்திருந்த காமிராவில் முகம் தெரியும் வண்ணம் நகர்ந்து வெளியேறினர்.
படம் எப்படியிருக்கு? தொடர்ச்சியான கேள்விகளாக இவர்களை தாண்டி செல்வோரிடம் கேட்டு கொண்டிருந்தனர் நிருபர்கள்.
“ஓகெ’ ‘சுமார்’ ‘பரவாயில்லை’ இப்படி பதில் சொல்லியபடியே காமிராவில் முகம் தெரியுமா என்னும் கவலையில் நகர்ந்தபடி இருந்தனர்.
சிலபேர் நின்று நிதானமாய் அந்த படத்தின் கதையில் நடித்த தன் கதாநாயகனின் அம்மா பாசத்தையும், குடும்ப பாசத்தையும் நின்று நிதானமாய் சொல்லி “படம் வெற்றிதான்” என்னும் தத்துவத்தையும் உதிர்த்து விட்டு நகர்ந்தனர்.
கிட்டத்தட்ட எல்லோருமே வெளியாகிவிட்ட நிலையில் கடைசியாக ஒரு மூதாட்டி அந்த தியேட்டரின் சூழ்நிலைக்கு சம்பந்தமில்லாதவள் போல் “மலங்க மலங்க” விழித்தபடி வெளியே வந்தாள்.
அதுவரை வெளியே வருவோரை ஆர்ப்பாட்டமாய் வரவேற்ற ஊடகத்தின் காமிராக்கள் அனைத்தும் சட்டென அந்த மூதாட்டியின் மீது திரும்பி “ப்ளாஷ்” அடித்தபடி அவளை நோக்கி திரும்பின.
முந்திகொண்ட ஒரு சில நிருபர்கள் காமிராவின் முன் வந்து “பாருங்கள் இந்த கதாநாயகனின் இரசிகையை, வயதானவர்கள் கூட இவர் மீது வைத்திருக்கும் அபிமானத்தை” காமிராவின் முன் சொல்லியபடி இருந்தார்கள்.
இத்தனை பேரை ஒருசேர பார்த்த அந்த பெண் பயந்து வேர்த்து வெளியே வந்தவளை நோக்கினாள். அத்தனை “மைக்குகள்’ வாயருகில் வந்து சொல்லுங்க உங்களுக்கு இந்த கதாநாயகனை ரொம்ப புடிக்குமா? இன்னும் இன்னும் பலரிடம் இருந்து பல கேள்விகள்…!
அந்த பெண் பயந்து விழித்து கரகரவென கண்ணீர் விட்டபடி “என் பையன் என்னை இங்க கூட்டிட்டு வந்து உள்ளாற உக்கார வச்சிட்டு எங்கியோ போயிட்டான்” இது என்ன இடம்? திணறி திணறி சொன்னாள்
அத்தனை “கேமிராக்களும்” “மைக்குகளும்” சட்டென அமைதியாகி சூழ்ந்திருந்தோர் அனைவரின் மனதிற்குள்ளும் “சோகம்” என்னும் பெரும் பாரம் ஏறி உட்கார்ந்திருந்தது.