செங்குளவி

கொய்ன் .....
என்ற ரீங்காரம்

செவ்வெறும்பின்
இறக்கை முளைத்த
பெரிய பரிணாமமோ !

செங்குளவியே உன்கூடு
மண்ணால்தான் என்றாலும்
எத்தனை வலிமை

மனிதனுக்கும்
கற்றுக்கொடு
அக்கட்டிட கலையை

ஒரு நாளில்
எத்தனை இடங்களைப் பார்த்துவிட்டு
நான்னிருக்கும் இடத்தில்
என்னை நம்பி
உன் வீட்டையே விட்டுச்சென்றாயே

நம்பிக்கை இல்லா
மனிதர்கள் வசிக்கும் புவியில்
உனக்கு மட்டும் எப்படி இந்த நம்பிக்கை ?

இந்த சிறிய தலைக்குள்
இத்தனை சீர்திருத்தமா !

என் தனிமையை
மெருகேற்றிய உன் குரலை
ஒலித்தகடுகளில்
வெளியிட முடிவு செய்துள்ளேன்

இக்குரலை தொந்தரவாக நினைத்து
உன்னை விரட்டுபவரும்
அடித்து கொல்வோரும் இருக்கிறார்களே
என்ற வருத்தம் எனக்கு மட்டுமே

அந்தக் காலை வேளையில்
சரியான விழிப்பிசை நீயே
நான் எழும்வரை நிறுத்த மாட்டாயே

படித்து கொண்டிருக்கும் என்னை
கல்லூரிக்குக் கிளம்ப மீண்டும் நீ தரும் இசை
அந்த நேரத்தை எந்த ஏட்டில் குறித்து வைத்தாய்

விடுமுறைகளில் எனக்கு தூக்கம் வரவில்லை எனில்
நீ தாலாட்டி என்னை உறங்க வைக்கும் உனக்கு
எப்படி நன்றி சொல்வேன்

அன்றொரு நாள் உறங்குகையில்
முகத்தில் விழுந்து மூன்றுகிராம் எடை எழுப்பியது
விழித்துப் பார்த்தேன் உன் உயிரற்ற தங்க உடலை

சற்று நேரத்தில் மறைந்து போனாய் நீ
ஆம் , விழிநீரால் விழித்திரையாளை
மறைத்துக்கொண்டது என் துக்கம்

பாசங்களும் பந்தங்களும்
அன்றுதான் அறிந்துகொண்டேன்
அழுகையை அடக்க முடியாத ஆடவனில்
நானும் ஒருவனாய்

விடுமுறையிட்டேன்
அறிவின் விருட்சம் வளரும் இடத்திற்கு ,
எவ்வித கூலியும் பெறாமல்
எனக்காக ஓடாகத்தேய்ந்த உனக்காக

தினமும் உன்னை நினைத்து
அழவைத்து விட்டாயே !
நீயின்றி எப்படி இனி நான்

உன்னை மண்ணுக்குள் விதைக்கவே
என் மனம் இடமளிக்க வில்லை ,
இருப்பினும்...


நித்தம் நித்தம் உன் சமாதியில்
நித்திலமேனும் மலரை வைத்து
சமாதானமாகிக் கொள்கிறேன் .

விரக்தி அடைந்தேன்
உயிரின் உண்மையான
மதிப்பைக்கண்டு

மீண்டும் உன் பணியை
உன்சந்ததி சுமக்கிறது
நான்தான் அவ்விடத்தைவிட்டு
வீடுதிரும்பப்போகிறேன்

செங்குளவி பசுங்குளவியாய்
என்றென்றும் என் மனதில்...

இருபதாண்டுகளுக்குப்பிறகு

ஒரு கட்டிடப் பொறியியல் வல்லுநர்
"எந்த மாதிரி வீடு உங்களுக்கு வேணும்? " .எனக் கேட்க
என் நினைவகத்தில் ஓர் பொறி

எடுத்தியம்பினேன் நம் கதையை ...

எழுதியவர் : சுகந்த் (12-Jan-13, 12:25 am)
பார்வை : 188

மேலே