பகிர முடியாத வார்த்தைகள்...!

இயல்புகளை விவரிக்க முயலும் வார்த்தைகள் தோல்விகளையே எப்போதும் தழுவுகின்றன. கற்பனைக்கு நிறைய பொய் தேவைப்படுகிறது. நிஜமோ நேருக்கு நேராய் நம்மை எப்போதும் எதிர்கொள்கிறது. சிறகடிக்கும் மனம் இளைப்பாறுவது என்னவோ எதார்த்தத்தில் தான்...

என் கவிதை சாலைகளின் விளிம்புகளில்தான் அவள் எப்போதும் எனக்காக காத்திருப்பாள் நிஜமென்னும் உணர்வுகளை ஏந்திப் பிடித்தபடி... !வர்ணிக்க கூடியது எல்லாம் விவரிக்க முடிந்தது... விவரிக்க முடியாதது வார்த்தைகளுக்குள் எப்போதும் வந்து விழுவதில்லை. காதலை விவரிக்கலாம்...கடவுளை...?
பூமியை விவரிக்கலாம்
அதன் மூலத்தை மொழி பெயர்க்கலாம்...
ஆனால் பிரபஞ்சத்தை அதன் ஆழத்தை எப்படி மொழியாக்கம் செய்வது..?

விரல் விட்டு எண்ணக் கூடியது எல்லாம் கடந்த பிரமாண்டத்தை உணர்தலே மிகப்பெரிய விடயம். அதை உணர்ந்தவன் அதில் லயித்துக் கிடப்பான் ஒரு நிரம்பி வழியும் பாத்திரத்தைப் போல..., அவனில் இருந்து தெறித்து விழுவது யாவுமே நிரம்பி பின் வழிவதுதான்.

எப்போது உள் நிறைந்து கிடப்பது, எப்போதும் வெளியில் வர முடியாதது. காந்தத்தின் அதிர்வுகளாய் உடலுக்குள் மையம் கொண்டிருப்பதை எப்போதும் காட்சிப்படுத்துவதிலும் கவிதைப் படுத்துவதிலும்..நாம் வெற்றி கொள்ள முடியாது.

வண்ணக் கலவைகளை எடுத்து விசிறும் தூரிகைகளுக்கு ஒவியத்தின் அழகைப் பற்றி என்ன கவலை? தூரிகையின் விசிறிலே அதன் விஸ்தாரமே ஓவியம். வர்ணங்களை கரைத்துக் கொடுத்து அதில் ஊறிக் கிடந்து ஒரு ஓவியத்தை படைத்த திருப்தியில் தூரிகைகள் எப்போதும் சந்தோசித்துக் கிடக்கின்றன....அவை ஓவியமாக எப்போதும் முயல்வதே கிடையாது...

இப்படித்தான் காதலுக்கு ஒரு கருப்பொருளாய் ஒரு காதலி அவளே கைத்தளம் பற்றிய ஒரு வாழ்க்கைத் துணை என்று நகரும் போது, தனித்து பகுத்து பிரித்து எப்படி எழுதுவது...

இயல்பை வெளிப்படுத்துதல் ஒரு போதும் கவிதையாவதில்லை...! நிறைவுகள் எப்போதும் காவியங்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும் இல்லை. தீரத் தீர எரியும் பெருங்கனலில் எரிதல் மட்டும் நிகழும்....! அப்படியான ஒரு வாழ்க்கையின் மிகப்பெரிய எரிதலில் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு நகரும் ஒரு பெருஞ்சக்தியாக ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் அமைகிறாள்.

எனக்கான நகர்வில் ஒரு சப்தமான மெளனத்தை நான் என் வாழ்க்கைத் துணையாக கொள்ள வெண்டியிருந்தது. நாம் பேசிப் பேசி சாதிக்க நினைத்ததை எப்படி ஒரு பெண்ணால் சப்தங்களற்று இறுக்கமான மெளனங்களால் மட்டுமெ வெற்றிக் கொள்ள முடிகிறது என்ற குழப்பமே எனக்கு இன்னும் தீரவில்லை....

ஆனால்...

காலம் என்னை வார்த்துக் கொண்டிருக்கிறது. காலம் என்னை புடம் போட்டுக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றி இருக்கும் சக மனிதர்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. என்னோடு அழுகிறது. என்னோடு சிரிக்கிறது. என்னோடு பட்டினிக் கிடக்கிறது. என் சந்தோசங்களை எப்போதும் தூர நின்று ரசிக்கிறது...

காலம் எப்போதும் நம் கூட இருப்பது...! அது நம் ஜனித்து விழுந்த நொடியில் இயங்கத் தொடங்கிய ஒரு மறைமுக வஸ்து ஆனால் ஒவ்வொருவரின் திருமணத்திற்குப் பிறகும் ஒரு பெண்ணுக்கு அது ஆணாகவும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாகவும் தன்னை பரிணமித்துக் கொள்கிறது....!

மானுடர்கள் இதை உற்றுக் கவனிப்பதில்லை. நான் நின்று நிதானித்து ஒரு குருடன் வாகனங்கள் நிறைந்த சாலையைக் கடக்கும் பொறுமையோடு இதை உணர்ந்திருக்கிறேன். வலியை வாங்கிக் கொள்ளவும், வலிகளை போக்கி விடவும் இந்தத் துணை காலம் காலமாக நம் சமூகம் மட்டுமில்லை...உலகத்தில் எல்லா சமூகத்திலும் உதவியிருக்கிறது.

பந்தங்களை, உறவுகளை, வெறுமனே கருவிகளாக பாவிக்கும் மனிதர்கள் இதனைப் பெரும்பாலும் உணர்வதில்லை..ஆனால் வாழ்க்கையை உணர்ந்து நகரும் போது திருமண பந்தத்தில் ஒரு பெண்ணின் ஆளுமை என்ன என்று ஒரு ஆணாலும், ஒரு ஆணின் தேவை என்ன என்று ஒரு பெண்ணாலும் தெளிவாக உணர முடியும்...

காலங்கள் நகர, நகர என் புத்திக்குள் தேங்கிக் கிடந்த ஆணாதிக்க சமுதாயத்தின் திடம் எல்லாம் மெல்ல, மெல்லக் கரைய, திருமணம் சடங்குகள் எல்லாம் கடந்த ஒரு துணையாக என் மனைவியை நான் பார்க்கத் தொடங்கினேன் அல்லது உணரத் தொடங்கினேன்...

மாயைகள் எல்லாம் உடைந்து போக.... ஒரு கோப்பை தேநீரை எதிர் எதிரே அமர்ந்து பருகும் ஒரு சுகத்தில் பக்கத்தில் இருக்கும் இருப்பினை உணர்தலே மிகப்பெரிய பாக்கியம், ஆறுதலான ஒரு தோள் சாய்தலே மிகப்பெரிய நிம்மதி.

தேவைகளற்ற ஒரு அன்பில் காதல் மிளிர்கிறது. அப்படியான தேவைகள் எல்லாம் தீர மிகப்பெரிய புரிதலும்...., பல தரப்பட்ட சூழல்களை நாம் கடக்கவும் வேண்டியிருக்கிறது.

பகிரமுடியாத அன்பாய் பரவும் காதலில் இருப்பு மட்டுமே இருக்கிறது...அங்கே வார்த்தைகளோ வசீகரமோ எப்போதும் இருப்பதில்லை...! காதலோடு இருக்கும் போது அதை விவரிக்கவும் வார்த்தைகள் இல்லை...!

பொய்யைப் பகிர்ந்து மெய்யை எப்போதும் என்னோடே நான் சுமக்கிறேன்....! ஆமாம் வாழ்க்கையின் அனுபவங்கள் எப்போதும் சுகமானவை ஆனால் பகிர முடியாதவைதானே...!!!!

ப்ரியங்களுடன்...

எழுதியவர் : Dheva.S (31-Jan-13, 8:49 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 129

மேலே