என் உலகம்

மது அருந்திய போதையுடன்
எனக்கான என் உலகத்தில்
பிரவேசிக்கிறேன்..
இது என் ராஜாங்கம்..
எனக்கான ராஜபாட்டையில்
ராஜநடை..
சில சமயம்
நடைவண்டி பயணம்..
முகங்களாய்ப் பூத்துக்கிடக்கும்
செடிகளையும்
நினைவுகள் இறைந்து கிடக்கும்
செம்மண் சாலையொன்றையும்
சாவதானமாகக் கடந்து செல்கிறேன்..
சில நினைவுகள்
மிதிபடுகின்றன..
சில
மிதிக்கப்படுகின்றன..
சிலவை என்னைப் பார்த்து
சிரித்தபடியே சற்று தூரமாய்...
மழைத்துக் குளித்த
மேகங்களையும்
மழையில் குளித்த
மரங்களையும்
ஒரு கணம் ரசிக்கையில்
காலடியை இடறுகிறது ஓர் நினைவு..
இலை சிந்திய கடைசித் துளியில்
ஓர் முகம்..
முகங்கள் அந்நியம்.
முகங்கள் அநித்தியம்.
நினைவுகளே ரம்மியம்.
நினைவுகள் அமரம்....