தமிழின் தலைவிதி....
தமிழின் தலைவிதி...
`````````````````````````
தமிழின் தலைவிதி தமிழர் கையில் உள்ளது.
தமிழர்… காலவேகத்தையறிந்து முன்னேற வேண்டும்.
தமிழ் ஏதோவொரு காலத்தில் தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது ,முதலையுண்ட பாலகனையழைத்தது , எலும்பைப் பெண்ணாக்கியது,
மறைக்கதவைத் திறந்தது,
எமகண்டத்தையும் வென்றது,
மந்திரத் திறமைப்பெற்று விளங்கியது,
தொல்காப்பியமென்னும் பொற்காப்பணிந்து,
சிலம்பு குலுங்க நடை தவழ்ந்தது.
முன்னே ,திபேத்து மட்டும்
தமிழ் வழங்கியது.
ஹிப்ரு மொழியிலும் புகுந்தது, மேனாட்டுடனே வாணிபம் செய்தது, யவனரையும்-சோனகரையும் பணியாளராகப் பெற்றது.
தமிழ்ச்சித்தர் சீனத்துலாவினர்,
தமிழ் வணிகர் பொன்னும் மணியும் முத்தும் வாரிக் குவித்தனர்.
தமிழரின் தேக்குக் கப்பல் உலகையெல்லாம் வாணிப வெற்றிகொண்டது.
தமிழர் மொழி –தனிமொழி
தமிழர் நாகரீகம் – தற்காலத்து
முற்போக்காளரும் வியக்கத்தக்கது.
வள்ளுவரையும் , சேக்கிழாரையும்
அப்பரையும் , மணிவாசகரையும்
கம்பனையும் , நம்மாழ்வாரையும்
ஔவைப் பிராட்யையும் ஈன்ற
தமிழ்த்தாயின் பெருமை அளவு கடந்ததே…!
எல்லாம் சரிதான்…
இன்று தமிழரின் நிலமை எப்படியுள்ளது?
தமிழரைப் பிறநாட்டினர் எப்படி மதிக்கின்றனர்..?
தமிழை மற்ற மொழியினர் எவ்வாறு கருதுகின்றனர்..?
என்று சற்று அனுபவ வாயிலாக ஆராய்ந்தால் தமிழ்படும் சிறுமை நமது மனதைக் குத்தும்.
தமிழ்ப் புலவர்மணிகள் கூடுமிடங்களில்
கன்னடமும் , களி தெலுங்கும்,
கவின் மலையாளமுந் துளுவும்,
உன்னுதரத் துதித்ததெழுந்து…
ஆரியம் போல் சீரிளமைத்திரம்…
எல்லாம் பாடலாம்.ஆனால், ஓர் ஆந்திரன் காதிற்படும்படி .ஆந்திரன், தமிழினின்று உதித்தது என்று வாயெடுங்கள்,பார்ப்போம்.
‘அரவம் அத்வானம், என்று இடித்திரைப்பான். தெலுங்கன், தமிழனின்று உதித்தவென முன்னே ஒப்புக் கொண்ட மொழிகளும் இன்று ஆரியத்தையே தாயாகப் பாராட்டத் தொடங்கியுள்ளன.
கி.மு.5000 இல் பரதகண்டமெல்லாம் தமிழே பரவியிருந்தது சிந்து மாகாணத்தில் உள்ள மொஹஞ்சதாரோ- ஹரப்பா என்னும் இடத்தில் மண்ணுக்கடியில் இரண்டு பெரிய திராவிட நகர்களை கண்டுப்பிடித்துள்ளனர் ஆராச்சியாளர்கள்.
அதிலுள்ள பொருள்களெல்லாம் தமிழர் நாகரீகத்திலுள்ள சின்னங்களே…
தமிழ் சார்ந்த மொழிகள் பன்னிரண்டென்பர்.இவை ,தான் முற்கால இந்தியர் மொழியாயிருந்தன.அவற்றுள்,
இராஜ்மஹால் – ஓராயன் – கூயி – கோண்டு – தூடா- கோடா , முதலிய மொழிகள் வளர்ச்சியற்று போயின.
தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் – துளு- குடகு, முதலியன நன்கு வளம் பெற்றவை.
300 ஆண்டுகளுக்கு முன்பே தலை தூக்கிய வங்கத்திற்கு உலகிற் பெருமதிப்புள்ளது.
அக்பர் காலத்தில் எழுந்த இந்தி, இந்திய மொழியானது.ஆங்கிலமும் – பிரெஞ்சும் –ஜெர்மனும் காலத்தை ஆளுகின்றன.
இம்மொழிச் செல்விகளெல்லாம் செங்கோல் பிடித்துலாவும் புகழ்வனத்தில்…..
நமது தமிழன்னை எங்கே?...
தமிழை நினைத்தால் நல்லதங்காள் கதை தான் முன்னே நிற்கிறது…
சந்திரமதிதான் கண்ணீர் வடித்து எதிரே நிற்கிறாள்.
பிள்ளைகளே…!
தாயை மதிக்காத போது பிறர் எப்படி அவளை மதிப்பர்..?
பதினெண் கீழ்க்கணக்கும், ஐம்பெருங்காப்பியங்களும் – கம்பர் சித்திரமும் – சைவ – வைணவத் தொண்டரின் தீஞ்சுவை அருட்பாக்களும் உள்ளன. ஆனால் அவற்றோடு தமிழ் நின்று விடுவதா..?
தமிழ்கலை வற்றாத உயிராக ஓடி உலகிற்கே உண்ணீராகப் பெருக வேண்டாமா…
பிரெஞ்சு லாரூஸ் அகராதியையும் ஆங்கில பேரகராதியையும் – வங்கம் – ஹிந்தியில் வர்ணப்படங்களுடன் வரும் நூல்களையும் ஒருபுறம் பார்த்துவிட்டு மற்றொருபுறம் தற்காலத் தமிழையும் பாருங்கள்.
அம்மொழிகளினும் உயர்ந்த அருட்செல்வம் தமிழுக்குள்ளது.அது கதிர் வீசிப்பரவ வேண்டும் .
புதுபுதுத்துறையுலும் புகுந்து அவரவர் திறனுக்கேற்றவாறு தமிழர் தமிழை வளர்க்க வேண்டும்.
நான் தமிழன்…
தமிழ் எனது தாய்மொழி.
நான் தமிழுக்கே…
தமிழ் உயர்வுக்கே…
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கே வாழ்வேன்.
நான்…
எதை செய்தாலும்
தமிழ் – தமிழர் – தமிழ்நாடு – ஆகிய
இவை பெருமை பெறவே செய்வேன்.
தமிழுக்கும் ,தமிழ்நாட்டிற்க்கும் ,தமிழருக்கும் கேடு சூழும் எதனையும் துணிந்தெதிர்து வெல்லுவேன் .
என்னுயிரை மறந்தாலும் தமிழை மறவேன்.
என்னுடலை சிதைத்தாலும் தமிழைக் கைவிடேன்.
எனது தமிழ்மொழி தான் உலகின் முதல் தோன்றிய முதுமொழி.
என் அன்னையை மீண்டும் மொழியரசியாக அரியணையேற்றவே நான் உயிர் வாழ்வேன்.
என்னுயிர் உள்ள மட்டும் ஒவ்வொரு நாளும் தமிழ் முன்னேற்றத்திற்காகவும் தமிழர் தலைநிமிர்ந்து…
உலகில் ஓங்கவும் நாளில் இரண்டு மணிநேரமாவது எதாயினும் பயனுள்ள ஒரு தொண்டு செய்வேன்.
அத்தொண்டை செய்தாலன்றி நான் உணவு கொள்ளேன்.
காலையும்,மாலையும் எனது தமிழ்நாட்டைத் தமிழாலயமாகக் கருதி தமிழ் வாழவே திருவருளை வணங்குவேன்.
என் தாய் வாழ்க…என்ற மந்திரத்தை எப்போதும் நினைப்பேன்.என்னை எதிர்த்த அன்னியருக்குத் தமிழின் பெருமையை,தமிழ்ப்பெரியாரின் சிறப்பை தமிழ்நாட்டின் மாண்பை விளக்குவேன்.இன்றிமையாத சமயமன்றி மற்றெப்போதும் தமிழாலேயே பேசுவேன்…எழுதுவேன்...
எந்தாய் வாழ்க…
எந்தாய் வாழ்க…
இவ்வுறுதி தமிழன் உயிர்பாகும்…!
~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~>~
(முக்கிய குறிப்பு…!)
--------------------------------
இந்தக்கட்டுரை…ஓராண்டுக்கு முன்பு கவியோகி சுத்தானந்தபாரதியின் தமிழுக்கு நீர் வார்த்தவர்கள் என்ற பகுதியில் (தினமணி)வெளிவந்துள்ளது. ஆனால் ,எனக்கு அறுந்த செருப்பை தைத்துக்கொடுத்த அன்பர் ,பொதிந்து தந்த காகிதமாய் எனக்கு கிடைத்தது.அதை விளையாட்டாய் வாசிக்க தொடங்கியதில் இந்த அற்புத தமிழின் வரலாற்றை அறிய முடிந்தது.நானும் தமிழ் தொண்டுக்கு இளைய மகனானேன்….

