தாளாத சோகத்தில் சோளம் !

ஓடிய காலத்தால்
ஓட்டைக் காதுகளுடன்
ஒண்டிக் கிடந்த கிழவியின்
சுளகுகளில் விளையாடி
சூரியக் குளியலில்
கண்ணயர்ந்து - தூங்கி
விழிக்கையில் - விற்பனைக்கு
வீதியில் விழுந்து கிடந்தோம் !

படிகளின் படியேறி
வேதிப்பைகளின் - கரம்
புகுந்து - கழனி கண்டோம்
ஓர் விடியற்காலையில் !
மண் மூடியதால் - மறுபடி
தூங்கினோம் - நிலத்தடியில்!

சூரியச் சூடு தாங்காமல்
நெஞ்சு விரிக்கையில்
தெறிகள் தெறித்து விழ
இலையிரண்டின் - கால்
நீட்டி - ஆகாயம் பார்த்தேன் !
ஆகாரமாய் - கிணறுக்குள்
குடியிருந்த தண்ணீரை
குடித்து ருசி பார்த்தேன் !

ஆட்டுக்கு எட்டாத உயரம்
அடியெடுத்து வைத்தேன்
பச்சையம் பருகிப் பருகி !
விளைவாய் - வளர்ந்த
நான் விளைந்தேன் !
குடும்பமாய் கூடிக்கதைத்த
சுகமடங்கும்முன் - அறுத்துச்
சாய்த்தனர் - என் செங்கழுத்தை !

தார்ச்சூட்டின் - வலி
கருதாமல் - சோளக்
கருதுதானேயென
சாலையில் கிடத்தினர் !
பின்பு - வேறெங்கோ
மூட்டையில் கடத்தினர் !

மயக்கம் தெளிந்து
விழித்துப் பார்க்கையில்...
எங்களுள் சிலர்...
திரைப்பட கூடத்தில்
பொரிந்து கிடந்தோம் !
மேலும் சிலர்...
செதில்களாய் உறிபட்டு
பல்பொருள் அங்காடியின்
வாசலில் கிடந்தோம் !
பெரும்பாலானோர் உடல்
பேருந்து நிலையத்து
தள்ளுவண்டியில் - இறுதி
ஊர்வலத்தில் நிரந்தர உறக்கத்தில் !

வெந்த என்னை
கறை படிந்த - கோரை
பற்களால் குதறி விட்டு
ஓடும் பேருந்தின் - சன்னல்
வழியே காரிருட்டுக்குள்
பெருத்துக் கருத்த
நெடுஞ்சாலையில்
வீசியபோதும் சக்கையாய்
உருண்டு வீழ்ந்தேன் !

நான் விதையாக மாறும்
விதியை - எழுதாத கடவுளை
தட்டியோ, குட்டியோ
ஏனென்று கேட்கும்
உரிமை யாருக்கு உள்ளது ?

எழுதியவர் : வினோதன் (14-Mar-13, 7:11 pm)
பார்வை : 213

மேலே