கருணைக் கொலையுண்ட கனவுகள் !-கே.எஸ்.கலை
குட்டி குட்டி கனவு நிறைய
கருண கொல செஞ்சிருக்கே(ன்) !
பட்டுப் போன கனவுக் குறிப்பு
கெட்டிடாம வச்சிருக்கே(ன்) !
பள்ளிக் கூடம் போற காலம்
பத்து பைசா நெல்லி வாங்க,
அந்தநாள்ல கனவு கண்டு
எந்தநாளு(ம்) தோத்துப் போனே(ன்) !
கடவீதி நடந்து போனா
கலருடுப்பு ஆசப் பட்டே(ன்) !
கஷ்டமான குடும்ப நெனப்பு-
கண்டுக்காம தாண்டிப் போனே(ன்)!
கூட்டாளி காலப் பாத்து
மனசு கேட்ட சப்பாத்து...
அடுத்த வருசம் வாங்கலாம்னு
அந்தக் கனவத் தள்ளிப் போட்டே(ன்)
குண்டுபல்பு வெளிச்சத்துல
படிக்க நானு(ம்) ஆசப்பட்டேன் !
குப்பி லாம்பும் சிம்னி லாம்பும்
படிப்பு முடியும் காலம் மட்டும் !
படிப்பு முடிச்சி வேல தேடி
பட்டணத்து பக்கம் வந்தே(ன்),
“நானா” கட பிரியாணிக்கு
நாள் கணக்கா தவமிருந்தே !
நாகரிக உடுப்புடுத்த
மாட்டப் போல உழச்சிருக்கே,
கேட்ட வரம் அத்தனையும்
கெட்ட வரம் ஆகிப்போச்சி !
இப்படியே கொன்னுப் போட்ட
எத்தனையோ கனவிருக்கு !
அழகான அவஸ்தயாத் தா(ன்)
அத்தனையும் நெஞ்சிலிருக்கு !