பள்ளிக்கொரு விழா! ஆண்டு விழா!
ஏழை வீட்டுப் பொண்ணும்
மாடி வீட்டு பையனும்
ஜோடி சேர்ந்து ஆடக்கிடைத்த தருணம்!
சிறு பிஞ்சுகளை முதல் முறையாக
மேடையேற்றி ஆடவைத்து
பார்க்க நினைத்தனர் பெற்றோர்!
ஆனால்
ஆடாமல்
அவர்களையே
பார்த்துக் கொண்டிருந்தனர்
சிறு பிஞ்சுகள்...
மேடையில் சிறார்கள்
ஆடுவதை பார்ப்பதை விட
அவர்களை ஆட வைக்க
ஆசிரியைகள் ஆடுவதைப் பார்க்க
இங்கு தான் கிடைக்கும்...
திரும்ப திரும்ப
பின்னால் நிறுத்தப்பட்ட சிறுவன்
திரும்ப திரும்ப
முன்னால் வந்தான்
கடைசியாக அமர்ந்திருக்கும்
அவன் தாத்தாவை பார்ப்பதற்காக...
முதல் முறையாக
வண்ண வண்ண
அழகான
விளக்குகளை
பார்த்த சிறுமி
ஆடாமல் விளக்குகளையே
பார்த்துக் கொண்டுருந்தாள்
அருகிலே இதுவரை
ஆடிய சிறுவன்
இப்போது ஆடுவதை நிறுத்திவிட்டு
அவளைப் பார்க்க தொடங்கிவிட்டான்...
ஆட வந்த பத்து பேரில்
ஒன்பது பேர் சரியாக ஆடினார்கள்
ஒரே ஒரு சிறுமி மட்டும்
களைந்து போன தலை முடியையும்
விழுந்துவிட்ட பூக்களையும் எடுத்து
சரி செய்து கொண்டிருந்தாள்
பார்க்க வந்த கூட்டம் அனைத்தும்
அவளையே பார்த்துக் கொண்டிருந்தது
சரியாக ஆடியோரை பார்க்காமல்...
நேரம் ஆக ஆக
ஒவ்வொருவரது நிகழ்ச்சியாக
முடிய முடிய
அனைவரும்
சிறிது சிறிதாக
கிளம்பிக் கொண்டிருந்தனர்
அன்று
கடைசியாக ஆடவிருந்த மாணவி
அவர்களையே கோபமாய்
பார்த்துக் கொண்டிருந்தாள்
வாழ்த்தி பேச வந்தவர்
குழந்தைகள் வாழ்வில்
எவ்வாறு நடக்க வேண்டுமென்று
விளக்கி கொண்டிருந்தார்
காலையிலிருந்து பயிற்சி செய்த மாணவ மாணவிகள்
தூங்கி விழுந்து கொண்டிருந்தனர்!
இவ்வாறாக
பள்ளி ஆண்டு விழா
இனிதே நிறைவேறியது...!