மீண்டு(ம்) வா ........!(புலமி)

தீயெனச் சுடும் சொல்லுடைத்து
===சிற்பமாக்கு வீரியம் குறையுமுன்
நீயென உனக்குள்ளே விளக்கிவிடு
===விடாப்பிடியாய் துரத்தும் வலிகளை !

குத்திக் கிழிக்கும் அம்புகளாய்
===ஆணவங்கள் அழிக்க முற்பட்டால்
கத்திச் சிரிக்குமுன் துணிவினால்
===அலறியடித்து திரும்பாது ஓடவிடு !

தூக்கிலிடத் துடிக்கும் கூட்டமுண்டு
===அங்கே உன்னைக் கைதியாக்கி
வாக்கிலிட்ட பொய்களைத் தோலுரித்து
===தூண்டிடுவார் கடைசி ஆசைக்காக !

சமூகம் குப்பையென ஒதுக்கிவிட்டால்
===மட்கிப்போக நினைப்பதுவும் சரியோ
சுமூகமாய் முடிவெடு விரைவாய்
===குப்பைக்குள் ஒளிந்துள்ள விதையாய் !

மிரட்டுமுன் ஆர்வத்தால் எழுந்திடுக
===மிதிப்போரைக் கண்ட பொழுதெல்லாம்
விரட்டும் தோல்விகளுக்கு ஆறுதலாய்
===வெற்றியொன்றை பரிசளிக்க முற்படுக !

முன்கோப குழந்தை முரண்டுபிடிக்க
===திறமையினை பொம்மையாகத் தந்து
நின் தாயுள்ளத் தகைமையின்பால்
===எழும் எண்ணம் அரவணைக்காதே !

அழும்போதே குட்டைக் கழிவுகளெனத்
===தேங்கிய சோர்வுகளை அகற்று
எழும்போதே உறங்கும் எரிமலையாகு
===அர்ப்பணிப்பைத் தனலெனக் கக்கு !

துயரத்தில் துயில்வது போதுமே
===விழித்திடு மெல்ல விழிநோக
உயரத்தில் பறக்கட்டுமே கனவுகள்
===மீண்டு(ம்) வா முயற்சியோடு !


(தம்பி ராஜ் கொடுத்த தலைப்பின் கீழ் படைக்கப்பட்டது)

எழுதியவர் : புலமி (20-Mar-13, 2:29 am)
பார்வை : 231

மேலே