விவாகரத்து
அன்று,
என் தந்தைப் பெருமையாகச் சொன்னார்,
"என் மகளுக்கு அழவே தெரியாது!"
இன்று,
நான் சொல்கிறேன்,
"எனக்கு அழுவதைத் தவிர
வேறு எதுவும் தெரியாது!"
நீ என்னைப் பிரிந்ததால்
இதயத்தைக்
கல்லாக்கிக் கொண்டேன்..
ஆனாலும்,
அதில் நீ இருந்தாய்,
சிற்பமாக...
காதலித்த நாட்களே
வாழ்க்கையின்
மிக அழகான
பக்கங்கள் பலருக்கு...
ஆனால்,
அந்த பக்கங்களைக் கிழித்து,
கசக்கி எறிவதே பழக்கம்
காலத்திற்கு..
உன் நிழலாக,
என்றும் உன்னுடன் இருப்பேன் என்றேன்..
பைத்தியக்காரி நான்..
இருட்டினுள் நீ சென்றால்,
நிழல்
எப்படி உடனிருக்கும்?
"தோழியா இல்லைக் காதலியா?" என்றாய்,
இரண்டும் இல்லை,
"உன் மனைவியடா நான்!" என்றேன்..
அப்படியானால்,
இந்த பிரிவின் பெயர்,
காதல் தோல்வி அல்ல..
விவாகரத்து!
ஆம்,
இருவருக்குமே
சற்றும் உடன்பாடின்றி,
காலத்தின் கட்டளையால் ஏற்பட்ட
விவாகரத்து!!
"காட்சிப் பிழையோ?
தோற்ற மயக்கமோ??"
கவிபாட நான்
பாரதி இல்லை..
கல்லறை கட்ட
ஷா ஜகானும் இல்லை..
உன் பிரிவை எண்ணி,
அழுவதா,
உயிரை விடுவதா
என அறியாத
பேதைப் பெண்!
வாழ்வுக்கும்
சாவுக்கும்
இடையில் நடக்கும்
போராட்டம்...
"வாழ்க்கையே ஒரு
நாடக மேடை", கூறினர் அறிஞர்..
காதல் நாடகம்
இனிதே அரங்கேறியது;
முடிந்தும் போனது!
ஒப்பனை கலைந்த முகத்துடன்,
அடுத்தப் பிறவி நாடகத்திலும் நாம்
இணைய வேண்டுகிறேன்...
பிரிவில்லா நாடகமானால் மட்டும்
கூப்பிடு என்னை...
மீண்டும்
உன் பிரிவைத்
தாங்க மாட்டேன் நான்!
மறுபிறவி இருந்தால்
சந்திப்போம்!
இந்த பிறவியின் நிலை என்ன?
இந்த பிரிவிலிருந்து
விடுதலை வேண்டும்!
மீண்டும் இணைவோமா?
மதில் மேல் பூனையாக
என் காதல்!